பழனி:
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மைய இயக்குநர் பெ.இராமமூர்த்தி அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:
ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய ஆயக்குடி கிராமத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை துவக்க பள்ளியும், 6 முதல் 10 ம் வகுப்பு வரை உயர்நிலை பள்ளியும் செயல்பட்டு வருகிறது. துவக்கப் பள்ளியாக இருந்து பல ஆண்டுகளுக்கு முன் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த பட்டது. தற்போது சுமார் 400 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். ஆயக்குடியை சுற்றியுள்ள கிராமப் புற மாணவர்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.ஆனால் மேல் நிலை வகுப்பு படிக்க பழனிக்கு செல்ல வேண்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது 7968 மேல்நிலை பள்ளிகள் உள்ள நிலையில் ஆயக்குடியில் அரசு மேல்நிலை பள்ளி இல்லாதது மாணவர்களுக்கு பெரிய ஏமாற்றமே. இடவசதிகளைக் காரணம் காட்டி மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த தாமதிக்க கூடாது. ஆயக்குடி விக்னேஸ்வர வகையறா இடும்பன் கோயிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் உள்ளன.இவற்றுக்கு குத்தகை செலுத்தி வந்தவர்கள் நிலம் வேண்டாம் என அரசுக்கு திரும்ப எழுதி ஒப்படைத்து விட்டனர். எனவே அந்த நிலங்களை அரசு வாங்கி அதில் அரசு மேல்நிலை பள்ளி கட்டிதரவும் பள்ளியை தரம் உயர்த்தவும் முன்வர வேண்டும்.பள்ளி ஆரம்பிக்க தேவையான தொடக்க காப்புதொகையை ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் செலுத்த இசைகிறோம். எனவே தமிழக அரசு ஆயக்குடி அரசுஉயர்நிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டுமென ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் சார்பில் வேண்டுகிறோம்.