விழுப்புரம். அக். 6- மோடி ஆட்சியில் இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலை உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்கூறினார் விழுப்புரத்தில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர்: பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. தனியாரிடம் இருந்த வங்கிகள் நாட்டு மக்கள் நலன் கருதி நாட்டுடமை யாக்கப்பட்டது. தற்போது 27 வங்கிகள் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அவை 12 வங்கிகளாக மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கி றது. வருமானவரித்துறை தங்களுடைய அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. மோடி ஆட்சியில் இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்கிற மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. மோடி ஒரு ஜனநாயக வாதியா அல்லது ஒரு பாசிஸ்ட்டா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.