எச்சரிக்கை
அணைகள் பாதுகாப்பு மசோதா 2019-க்கு மத்திய அமைச்சரவை ஓப்புதல் அளித்துள்ளது. இதன்படி நாட்டில் உள்ள 5600க்கும் மேற்பட்ட அணைகளை ஒரே நடைமுறையை கடைப்பிடித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அணைகளை தொடர்ந்து ஆய்வு செய்து. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்து பழுதுபார்த்து அணைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அதோடு தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும் அமைக்கப்படும்.
அணைகள் பாதுகாப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதேநேரம் அணையின் பாதுகாப்பை முறைப்படுத்துவது தொடர்பான எந்த ஒரு சட்டமும் மாநில அரசுகளின் செயல்பாட்டையும் உரிமைகளையும் எந்த வகையிலும் பறித்துவிடக் கூடாது. அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையில் 2வது பட்டியலில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம் இயற்றுதல் மற்றும் நிர்வாகம் தொடர்பான வரையறைகளும் எல்லைகளும் அரசியல் சாசனத்தின் இந்தப் பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. எனவே புதிய வரைவு சட்ட மசோதா இந்த வரையறைகளையும் எல்லைகளையும் மதிப்பதாக அமைய வேண்டும் 2010-ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் எந்த சட்டத்தின் அடிப்டையில் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்பது பற்றிய தெளிவான குறிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால் புதிய மசோதாவில் இத்தகைய குறிப்பு இடம் பெற்றதாக தெரியவில்லை.
ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே பாயும் நதியின் மீது கட்டப்படும் அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் அவற்றை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு முழுவதுமாக அந்த மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே வரும். இது 7வது அட்டவணையின் 2வது பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சம் ஆகும். ஆனால் புதிய மசோதாவில் இந்த அதிகாரத்தை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் சாசனத்திற்கு முரணானது மட்டுமின்றி மாநில அணைகள் பாதுகாப்பு கமிட்டி மீது அதிகாரம் செலுத்தக்கூடியதாகவும் உள்ளது. புதிய மசோதாவில் ஒரு மாநிலத்தில் அமைந்துள்ள அணைகள் நீர்த்தேக்கங்களை மாநிலங்களுக்கு இடையேயான நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் வேறொரு மாநிலம் சொந்தம் கொண்டாடி பராமரித்து செயல்படுத்தி வரும் பிரச்சனை பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாதிரியான அணைகளை தேசிய ஆணையம் தனது நேரடி கட்டுபாட்டில் பாதுகாத்து பராமரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அணைக்கு சொந்தமான மாநிலத்தின் உரிமைகள் பறிபோகாமல் காப்பது என்பது மத்திய அரசின் தலையாய கடமையாகும். அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு ஒரு சார்பு நிலையை மேற்கொண்டால் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழயில்லாமல் போய் விடும்.
தமிழ்நாட்டின் முல்லைபெரியாறு பரம்பிக்குளம் துணைக்கடவு, பெருவாரிபள்ளம் ஆகிய அணைகள் மாநிலங்களுக்கு இடையோயான ஒப்பந்தங்கள் மூலம் தமிழக அரசு உரிமையுடன் நிர்வகித்து வருகிறது. ஆனால் இந்த அணைகள் பக்கத்து மாநிலத்தில் உள்ளன. புதிய மசோதாவில் இந்த உரிமைகள் பாதிக்கக்கூடிய எந்த அம்சமும் இருக்கக் கூடாது. இது அந்த அணைகளை நம்பியுள்ள விவசாயிகள் பொதுமக்களை பெரிதும் பாதிக்கும். மேலும் கூட்டாட்சி தத்துவத்தை உடைக்கும் வகையிலான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்யக்கூடாது. மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப, நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டு மாநில உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர். தமிழகத்தின் உரிமைகள் பறிபோகாமல் காக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் தமிழக எம்பிக்களுக்கும் உள்ளது. அந்த கடமையை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் கோட்டை விட்டால் மாநில உரிமையை இழந்து வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறுவதில் நியாயம் உள்ளது.