tamilnadu

img

கொரோனா தொற்று பரவலை தடுக்க 500 குடும்ப அட்டைக்கு ஒரு ரேசன் கடை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஆக.12- குடும்ப அட்டைதார்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக 500 குடும்பங்களுக்கு ஒரு ரேசன் கடை அமைக்க வேண்டுமென்று அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய மாவட்டக்குழுக்கள் சார்பில் பொதுவிநியோக முறை குறித்து 150 ரேஷன் கடைகளிலும், 500க்கும் மேற்பட்ட பயனாளிகளிடமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், மக்களின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புதனன்று (ஆக.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து வட்டாட்சியர் சேகரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு: ஒரு ரேசன் கடைக்கு 1000 முதல் 2000 வரையிலான குடும்ப அட்டைகள் உள்ளன. இதனால் பொருட்களின் பற்றாக்குறையும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கணக்கில் கொண்டு 500 குடும்ப அட்டைக்கு ஒரு கடை அமைத்து பொருட்களை வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் பிற பொருட்களோடு, உளுத்தம் பருப்பையும் வழங்க வேண்டும். ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு பொருட்களும், நிவாரணத் தொகையும் கிடைக்கவில்லை. ஆதார் அட்டையை குடும்ப அட்டையாக கணக்கில் கொண்டு விடுபட்டவர்களுக்கு பொருட்களையும், நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும். 21 வகையான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், உப்பு, டீ தூள், சோப்பு போன்ற பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. குடும்ப அட்டை இருந்தும், பல காரணங்களால் நிவராணத் தொகை பெறாதவர்களின் பணம் மீண்டும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்தகையோருக்கு மீண்டும் ஒருவாய்ப்பு கொடுத்து நிவாரணத்தை தர வேண்டும். ஆக.5ந் தேதி ரேசன் கடைகள் மூலம் ஒருவருக்கு 2 முகக்கவசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை அமல்படுத்தவில்லை. இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ். சரவணச்செல்வி, செயலாளர் சித்ரகலா, நிர்வாகிகள் பிச்சையம்மாள், ஜூலியட் (தென்சென்னை), விமலா (மத்தியசென்னை), பவானி (வடசென்னை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.