1933 - ஜெர்மன் மாணவர் சங்கம் என்ற, ஹிட்லரின் நாஸி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை, பெர்லின் பெபெல்ப்ளாட்ஸ் சதுக்கத்தில் எரித்தனர். ஜெர்மனியின் பல நகரங்களிலும், ஜெர்மன் அல்லாத உணர்வுக்கு எதிராகத் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் நடத்தியதுடன், அன்றிரவு நாஸித் தலைவர்கள் உரையாற்றிய கூட்டங்களும் நடத்தப்பட்டன. இக்கூட்டங்கள் நடந்த இடங்களில் மாணவர்கள் இசை, நடனத்துடன், தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தீயில் வீசினர். இவ்வாறு எரிக்கப்பட்ட புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ், மார்க்சிய சிந்தனையாளரான கார்ல் கவுட்ஸ்கி ஆகியோரின் புத்தகங்கள் முக்கிய இடம்பெற்றன. பொதுவுடைமை நூல்கள், யூத நூல்கள், போருக்கு எதிரான கருத்துகள் கொண்டவை உள்ளிட்ட நூல்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதற்கு முன்பாக, ஏப்ரல் 8 அன்று, ஜெர்மன் மாணவர் சங்கம் ஜெர்மன் அல்லாத உணர்வுக்கு எதிரான இயக்கத்தை நாடுமுழுவதும் நடத்துமாறு அழைப்புவிடுத்திருந்தது. மிக ஆபத்தான எதிரிகள்யூதர்கள், அவர்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கருத்துகளுடன், ஜெர்மன் மொழியின் தூய்மையைக் காக்க, ஜெர்மன் மொழியிலுள்ள ஜெர்மன் அல்லாத உணர்வுடைய நூல்களை அழிக்கவேண்டும் என்று அழைப்புவிடுத்த 12 அம்ச அறிக்கையை இச்சங்கம் வெளியிட்டிருந்தது. மார்ட்டின் லூதர் 1520இல் திருத்தந்தை ஆணையோலையை எரித்ததையும், அதன் 300ஆம் ஆண்டின் நினைவாகச் சில நூல்கள் எரிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, அதைப்போன்றதுதான் இந்த எதிர்ப்பு என்றுஅச்சங்கம் கூறிக்கொண்டாலும், அவையெல்லாம் அடையாளப்பூர்வமாக ஓரிரு பிரதிகளை எரித்த நிகழ்வுகள் மட்டுமே. ஆனால், நாஸிகள் தங்களுக்கு எதிரான நூல்களே இருக்கக்கூடாது என்று அனைத்தையும் எரித்தார்கள். நாஸிகளுக்கு எதிராகப் பேசமுடியாத மிகக் கடுமையான அரசுத் தணிக்கையை இந்நிகழ்வு தொடங்கிவைத்தது. முழுக்க முழுக்க அனைத்திலும் நாஸிசக் கருத்துகள் திணிக்கப்பட்டிருந்த நிலையை மாற்ற, நேச நாடுகள் ஜெர்மனியைக் கைப்பற்றியபின், 1946இல் பள்ளிப் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் முப்பதாயிரம் நூல்களின் ஏராளமான பிரதிகளை அழிக்க நேர்ந்தது.