tamilnadu

img

எங்கெங்கு திரும்பினும் ஷாகீன்பாக் - ஜி.ராணி

குடியுரிமை திருத்தச் சட்டம் - 2019க்கு எதிராக  தில்லி ஷாகீன்பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வடகிழக்கு தில்லியில் சீலாம்பூர், மவுஜ்பூர் பகுதிகளை யமுனா  விகாருடன் இணைக்கும் சாலையில் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களின் மறியலுடன் நாடு முழுவதும் பரவிய ஷாகீன்பாக் போராட்டம், தமிழ்நாட்டிலும் இஸ்லாமிய பெண்களின் எழுச்சியாக மாறி இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலி யுறுத்தியும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட போராட்டம் சுமார் 20 நாட்களாக நீடிக்கிறது.

தமிழகத்தில் 35 இடங்களில் ‘ஷாகீன்பாக் போராட்டம்’ நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், தொண்டி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, கூத்தா நல்லூர்,  அடியமங்கலம், சென்னை பல்லாவரம், வேலூர் மாவட்டம் பேராணாம்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப் பட்டினம், புதுக்கோட்டை நகரம் கலீப் நகர், அம்மாபட்டினம், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரிய பள்ளிவாசல், தொப்பம்பட்டி தாலுகா  கீரனூர், சென்னை  வண்ணாரபேட்டை, தேனி மாவட்டம் பெரியகுளம், கோவை மாவட்டம் ஆத்துப்பாலம், தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம், மதுக்கூர், கீழவாசல், நெல்லை மாவட்டம்  மேலப்பாளையம், சென்னை மாவட்டம் மண்ணடி, தென்காசி மாவட்டம் கடையநல்லூர், கொடிமரம், கடலூர் மாவட்டம் லால்பேட்டை,  திருச்சி  உழவர் சந்தை,  திருப்பூர் வலம்ரோடு, சேலம் மாவட்டம் கோட்டை பகுதி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மதுரை மஹபூப்பாளையம், ஈரோடு ஜின்னா வீதி, கும்பகோணம் - மீன் மார்க்கெட் அருகில், வாணியம்பாடி- ஆற்றுமேடு, திண்டுக்கல் பேகம்பூர், பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள மஸ்ஜிதே மூவிஸ் பள்ளிவாசல், தென்காசி- விடிஎஸ்ஆர் மஹால், புளியந்தோப்பு- டிகாஸ்டர் சாலை, அம்பேத்கர் சிலை என 35 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். 

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என குவியல் குவி யலாக போராட்டக் களத்திற்கு வருகிறார்கள். திண்டுக்கல் பேகம்பூரில் பெண்களிடம், போராட்டக் களத்திற்கு எப்படி வந்தீர்கள் என கேட்டபோது, இந்தியாவையே தாயகமாக கொண்ட நாங்கள் எப்படி குடியுரிமை அற்றவர்களாக இருப்போம் என்று ஆக்ரோசமாக பேசினார்கள். ஒட்டு மொத்த மக்களும் இந்திய குடிமக்களாகத் தான் இருப்போம்; எந்த வகையான மிரட்டல்கள் வந்தாலும் அஞ்சமாட்டோம் என்றார்கள். பெண் குழந்தைகள் - இந்து வாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி - ஒட்டு மொத்தமாக பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது; ஒட்டு மொத்த மக்களும் வாழ முடியாதநாடாகவும் மாற்றப்பட்டிருக்கி றது என்பதுதானே உண்மை எனக் குமுறினார்கள். எங்களோடு இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கைகோர்ப்பார்கள் என நம்புகிறோம்; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அனைவரும் ஒற்றுமை யுடன் தான் வாழ்கின்றோம். அதை சிதைக்கத்தான் மோடி அரசு சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்றார்கள்.  

கேரளா, பீகார் உட்பட 13க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் தமிழ கத்தில் அம்மாவின் வழியில் ஆட்சி நடத்துகின்றோம் என்று சொல்லி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்கள், இதைச் செய்ய மறுப்பது ஏன் என்றும் போராட்டக் களத்தில் உள்ள பெண்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

தமிழக அரசு வரும் கூட்டத் தொடரிலாவது சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஷாகீன் பாக் போராட்ட எழுச்சியின் ஒற்றைக் குரலாகும். இது இஸ்லாமியப் பெண்களின் குரல்தானே என்று யாரும் அலட்சியம் செய்துவிட்டு கடந்து போக முடியாது. ஏனென்றால் இது இஸ்லாமியப் பெண்களின் போராட்டம் மட்டுமல்ல.

பஞ்சாப் மாநிலத்தின் மலர்கொட்லா நகரில் சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கிய பெண்கள், களத்தில் இருக்கிறார்கள். இவர்களோடு, இஸ்லாமிய பெண்கள், விவசாயிகள் என அனை வரும் மஞ்சள் நிற ஆடையை அணிந்து ஒரே குரலில்இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனைவரும்  சகோ தரர்களே; இது மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டமே என முழக்க மிடுகின்றனர். பஞ்சாப், ஒரு உதாரணம் மட்டுமே!

இதுபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வரும் “ஷாகீன்பாக்” போராட்டங்களிலும் தமிழக போராட்டங்களிலும் நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிக மான உறுப்பினர்களையும் தமிழகத்தில் சுமார் 6.5 லட்சம் உறுப்பினர்களையும் கொண்டுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், இதர பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன. முதல்முறையாக வீதிக்கு வந்து போராட்ட முழக்கம் எழுப்பும் இஸ்லாமிய பெண்களோடு இந்துக்கள், கிறிஸ்த வர்கள் உட்பட அனைத்து சமூகங்களைச் சேர்ந்த பெண்க ளும் துணை நிற்கிறார்கள் என்பதுதான் இந்தப்போராட்டம் உறுதியாக நீடிப்பதன் சூட்சுமம். 

கட்டுரையாளர் : திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், 
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்