புதுதில்லி:
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கிட பிஎஸ்என்எல் நிர்வாகம் தவறிவிட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுதும் கண்டன முழக்கம் எழுப்புமாறு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிஎஸ்என்எல் நிர்வாகம் மீண்டும் ஒருமுறை அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிடத் தவறியிருக்கிறது. ஆகஸ்ட் மாத ஊதியத்தை வழங்காதது மட்டுமல்ல, எப்போது வழங்கப்படும் என்று கூட அதனால் கூற இயலவில்லை.பிஎஸ்என்எல் நிர்வாகம், அதன் ஊழியர்களுக்குக் காலத்தில் ஊதியம் வழங்காதது இந்த ஆண்டில் இது மூன்றாவது தடவையாகும். ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் ஏற்கனவே செப்டம்பர் 3 அன்று (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்திடுமாறு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.
டெலிகாம் துறையும், பிஎஸ்என்எல் நிர்வாகமும் ஊழியர்களுக்குக் காலத்தில் ஊதியம் வழங்குவதற்கு உரிய ஏற்பாடு களைச் செய்திருக்க முடியும். ஓய்வூதியப் பங்களிப்புக்காக பிஎஸ்என்எல் நிர்வாகத்தால் அதீதமான தொகை ஏற்கனவே அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் திருப்பி ஒப்படைத்தாலே அரசாங்கத்தால் ஊழியர்களின் ஊதியத்தினை அளித்திட முடியும்.
அரசின் நோக்கம் என்ன?
பிஎஸ்என்எல் ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு உணர்வையும், விரக்தியை யும் ஏற்படுத்தி அவர்களை சுய ஓய்வுக்குக்கட்டாயப்படுத்திட வேண்டும் என்பதற்காகவே டெலிகாம் துறையும், பிஎஸ்என்எல் நிர்வாகமும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக் கின்றன என்று பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் உறுதிபடக் கருதுகிறது.பல லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்குக் கடன்கள் வைத்திருக்கின்ற தனியார் டெலிகாம்நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் தொகை என்பதுமிகவும் அற்பமானதே ஆகும்.2019 ஆகஸ்ட் 20 அன்று பிரதமர்அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, பாரத ஸ்டேட் வங்கியும், பேங்க் ஆப் இந்தியாவும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்குக் கடன்கள் கொடுத்து உதவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
வருவாய் வீழ்ச்சிக்கு என்ன காரணம்
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிற நிதி நெருக்கடிக்குக் காரணம் அதன் வருவாயில் கடும் இழப்பு ஏற்பட்டிருப்பதே காரணம் என்பதை வெளிப்படையான ரகசியமாகும். அதாவது 32 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 18 ஆயிரம் கோடி ரூபாயாக வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இதர நிறுவனங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்திருப்பதுதான் (predatory pricing) காரணமாகும். இவ்வாறான ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த கட்டண நிர்ணயத்தின்மீது அர்த்தமுள்ள நடவடிக்கை எதையும் எடுத்திடவும், அதன்மூலமாக டெலிகாம் தொழிலை ஆழமான நெருக்கடியிலிருந்து பாதுகாத்திடவும் அரசு மறுக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குக் கடன் வழங்கி, அதனைப் பாதுகாத்திட வேண்டும் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின்கீழ் இயங்கிடும் பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் உட்பட அனைத்து சங்கங்களும் கோரி வருகின்றன. இதேபோன்று மத்திய அரசு 63 நாடுகளுக்கு சுமார் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடன் கொடுத்திருக்கிறது.இன்றைய சூழ்நிலையில் இதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் கடன் அளித்திட வேண்டும்.பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிர்வாகமும், டெலிகாம் துறையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு பி.அபிமன்யு அறிக்கையில் கூறியுள்ளார்.(ந.நி.)