புதுதில்லி:
அமித் ஷா கையை நீட்டி மிரட்டும் தொனியில் பேசுவதாலேயே, அவருக்கு யாரும் பயப்படப் போவது கிடையாது; என்றும் பயந்து நடுங்குவதற்கு அமித்ஷா கடவுளா என்ன?என்றும் இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.
என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, ஒவைசி பேசியபோது, “புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு தற்போது என்ன தேவை வந்துள்ளது; இந்த விவகாரத்தில் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. இந்தியாவின் நிலை வேறானது” என்று கூறினார்.அப்போது குறுக்கிட்ட பாஜகஎம்.பி. சத்யபால் சிங், “தீவிரவாதவழக்கு தொடர்பாக விசாரித்து வரும் ஹைதரபாத் காவல்துறை ஆணையரை மாற்றுமாறு அம் மாநில அரசு அழுத்தும் தருகிறது; இதுபோன்று தனிப்பட்ட சிலரை காப்பாற்றும் நடவடிக்கைகளைத் தடுக்கவே மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது” என்றுதெரிவித்தார்.
ஆனால், இது ஆதாரமற்ற வாதம் என்றும், பாஜகவினர் ஆதாரத்துடன் எதையும் பேச வேண்டும் என்றும் ஓவைசி பதிலளித்தார். அப்போது எழுந்த மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா, “உங்கள் மன
தில் பயம் இருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றுகூறினார்.
இந்த விவாதங்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஒவைசி “தங்களுக்கு பிடிக்காதவர்களை ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்துவதை பாஜகவினர் தொடர்ச்சியாக செய்துவருகின்றனர்” என்று விமர்சித்த ஓவைசி, “அமித் ஷா கையை நீட்டி மிரட்டும் தொனியில் பேசுகிறார்; ஆனால், அவரை பார்த்து நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம். அஞ்சுவதற்கு அவர்என்ன கடவுளா?” என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.