tamilnadu

img

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ... நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்க ... மக்களவையில் ஏ.எம். ஆரிப் வலியுறுத்தல்

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்வதற்குத் தேவையான நிவாரணநடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.எம். ஆரிப் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள் அன்று தொடங்கியது. நாடாளுமன்ற நடத்தை விதிகள் 377ஆவது பிரிவின்கீழ் ஏ.எம். ஆரிப் பேசியதாவது:கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதல் காரணமாக மக்களின் வாழ்க்கை நாசமாகி இருக்கிறது. இதிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசாங்கம் முறையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. திடீரென்று எவ்விதத் திட்டமிடலுமின்றி நான்கு மணி நேர அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட சமூகமுடக்கம் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு சொல்லொண்ணாதுன்ப துயரங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. புலம்பெயர்வோர் அவல நிலை தொடர்கிறது. அவர்கள் பசி-பட்டினிக் கொடுமையாலும், விபத்துக்களாலும் உயிரை இழந்து வருவது தாங்கமுடியாதவைகளாக இருக்கின்றன. சமூக முடக்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நம் வல்லமையையும் வலுப்படுத்திடவில்லை, மக்களுக்கு இத்தகு மோசமான நிலைமைகளில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நிவாரணத்தையும் அளித்திடவில்லை.எனவே, மத்திய அரசாங்கம் மக்களைக் காப்பாற்றுவதற்கு, அவசர நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். வருமான வரி செலுத்தாத குடும்பங்கள் அனைத்திற்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு 7,500 ரூபாய் மாதந்தோறும் ரொக்கமாக அளித்திட வேண்டும். ஒவ்வொருநபருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானிங்கள் மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.இவ்வாறு வழக்கறிஞர் ஏ.எம்.ஆரிப் வலியுறுத்தியுள்ளார். (ந.நி.)