மத்திய அமைச்சகங்களில் உள்ள உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தோருக்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. திப்யேந்து அதிகாரி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எழுத்து மூலம் மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் அளித்த பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது
மத்திய அமைச்சகங்களில் சார்புச் செயலாளருக்கு மேற்பட்ட மிக உயரிய பிரிவில் செயலர் பதவியில் 89 பேர் பணிபுரிவதாகவும் அதில் எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த ஒரே ஒருவரும், எஸ்டி பிரிவில் மூவர் மட்டுமே பணிபுரியும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் 93 கூடுதல் செயலர் பணியிடங்களில் எஸ்.சி. பிரிவினர் 6 பேரும், எஸ்டி பிரிவினர் மூவர் மட்டுமே பணியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 275 இணைச் செயலர்களில் எஸ்.சி., பிரிவினர் 13 பேரும், எஸ்.டி.,யினர் 9 பேரும் மற்றும் 19 பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பணிபுரிகின்றனர். மற்ற அனைவரும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 288 இயக்குநர் பணியிடங்களில் 83 பேர் மட்டுமே இடஒதுக்கீட்டு பிரிவினர் ஆவர்.
மத்திய சார்புச் செயலருக்கு மேற்பட்ட உயர் பதவி நியமனத்துக்கு ஏற்கனவே உள்ள பட்டியலில் உள்ள அதிகாரிகளுக்கே பதவி உயர்வு கிடைக்கும் என்றும் இடஒதுக்கீட்டு பிரிவினர் தாமதமாக பணியில் சேருவதால் பெரிய பதவிக்கு வராமலே ஓய்வு பெற்றுவிடுவதாகக்அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகப் பணியிடங்களில் சார்புச் செயலர் மற்றும் அதற்கும் மேலான பதவிகளில் 26 இணைச் செயலாளர்கள் பணியில் இருப்பதாகவும், அதில், 16 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்களென்றும், எஸ்.சி பிரிவினர் 6 பேரும் எஸ்.டி. பிரிவினர் 4 பேரும் பணிபுரிவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. 570 துணை செயலாளர் பணியிடங்களில் 433 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எஸ்சி பிரிவில் 78 பேரும், எஸ்டி பிரிவில் 59 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 1788 சார்புச் செயலாளர் பணியிடங்களில் 1360 பணியிடங்களில் பொதுப்பிரிவினர் பணிபுரிகின்றனர். எஸ்சி பிரிவில் 274 பேரும் எஸ்.டி. பிரிவினர் 154 பேரும் மட்டுமே பணிபுரிகின்றனர்.
சார்புச் செயலருக்கு நிகரான மூத்த முதன்மை தனிச் செயலர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளிலும் கூட அதிகபட்சம் 27 சதவீதம் வரை எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் பணிபுரிகின்றனர் என்றும் இப்பதவிகளுக்கு ஓபிசி-யினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு இல்லாததால் தரவுகளை வைத்துக் கொள்ளவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அமைச்சகம் மற்றும் செயலகப் பணிகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை என்ற அதிர்ச்சித்தகவலை மத்திய அரசின் இந்த புள்ளி விபர பட்டியல் அம்பலப்படுத்தி உள்ளது.