புதுதில்லி, ஏப்.23-உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து, வெளிப்படைத்தன்மையுடனும், நம்பகத்தன்மையுடனும் விசாரணை நடைபெற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரியுள்ளது.இது தொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்ததையும், அதனை உச்சநீதிமன்றம் எதிர்கொண்டவிதத்தையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்மிகவும் வேதனையுடன் பதிவுசெய்கிறது. இந்தப் புகார் உண்மையாக இருந்தாலும் சரி அல்லது அவ்வாறில்லாதிருந்தாலும் சரி,இதனைக் கையாண்ட விதம்,அதிலும் குறிப்பாக மிக உயர்ந்தஸ்தானத்தில் உள்ள ஒருவருக்குஎதிரான இப்புகார் மீதான நடவடிக்கை நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறு இதில் நடைபெறவில்லை. எப்போதும் பாலின சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஓர் அமைப்பு என்கிற முறையில், உச்சநீதிமன்றத்தின் மீது மக்களும் மற்றும் அரசமைப்புச்சட்டமும் வைத்திருக்கக்கூடிய மதிப்புகுலையாதவண்ணம் சட்டத்திற்குட்பட்டு, உச்சநீதிமன்றம் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகஉறுதியுடன் செயல்பட வேண்டியதும் மற்றும் இந்த வழக்கை அதற்கேற்றவிதத்தில் கையாள வேண்டியதும் அவசியத் தேவை என்று நாங்கள் உணர்கிறோம்.இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிக்கையில் கோரியுள்ளது.