மக்களை மதத்தின் அடிப்படையில் பிளக்கும் நடைமுறை, ஜெர்மனியில் ஹிட்லர் கையாண்ட நடைமுறையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் திங்கள் அன்று குடியுரிமை (திருத்தச்) சட்ட முன்வடிவின் மீதான விவாதத்தின்போது, ஏ.எம். ஆரிப் பேசியதாவது:
இந்தச் சட்டமுன்வடிவை நான் எதிர்ப்பதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. என்னைப்போன்று புதிய உறுப்பினர்கள் இந்த அவைக்கு வந்தபோது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வின்போது குடியரசுத் தலைவர் பேசுகையில், சமூக சீர்திருத்தவாதி, நாராயண குருவின் ஒருசில அழகான வரிகளை மேற்கோள்காட்டினார்.ஜாதி பேதமின்றி, மதத் துவேஷமின்றி அனைவரும் சகோதர, சகோதரிகளாக ஒற்றுமையுடன் வாழக்கூடிய முன்மாதிரி பூமியாக இது இருந்திட வேண்டும் என்று பொருள்படும் வரிகளை அப்போது அவர் மேற்கோள் காட்டினார்.
ஆனால் இன்று நிலைமைகள் மாறிவிட்டன. அனைத்து விஷயங்களுமே வெறுப்பைக் கக்கக்கூடிய விதத்திலும், அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் மாறியிருக்கின்றன. ஆட்சியாளர்கள் வெளியில் ஒன்று சொல்கிறார்கள்; ஆனால் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் உள்ளபடி வேறொன்றைச் செய்கிறார்கள். எனவே இந்தச் சட்டமுன்வடிவை நான் எதிர்க்கிறேன். இந்தச் சட்டமுன்வடிவானது நம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் காணப்படும் முக்கியமான கொள்கை விதிகளுக்கு எதிரானதாகும். அதேபோன்று அரசமைப்புச் சட்டத்தின் 5, 10, 14, 25 போன்ற பிரிவுகளுக்கும் எதிரானதாகும்.குடியுரிமைச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம், நம் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானதாகும். நாடு பிளவுண்ட சமயத்தில் மகாத்மா காந்தி, “இந்தியாவைப் பிளப்பது என்பது என் இதயத்தை இரண்டாகப் பிளப்பதைப் போன்றதாகும்” என்றார். இப்போது, பாஜக அரசாங்கம் இந்தியாவின் இதயத்தை குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவின் மூலமாக பிளந்து கொண்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவின்படி, குடியுரிமையைப் பெறுவதற்கு மிக எளிய வழி, ஒருவர் இந்தச் சட்டமுன்வடிவில் கூறப்பட்டுள்ள ஆறு மதங்களில் ஏதேனும் ஒன்றுக்குத் திரும்புவது என்பதாகும். ஒரு முஸ்லீம் கூட, அவர் தன் மத நம்பிக்கையை மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்தார் என்றால், குடியுரிமையைப் பெற முடியும்.
இந்த அரசாங்கம், மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து போராடிக்கொண்டிருக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற விளையாட்டுகளின்மூலம் எப்போதும் வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த நாட்டை – ஜனநாயக, மதச்சார்பற்ற இந்த நாட்டை – ஒரு மதரீதியான நாடாக மாற்றாதீர்கள் மக்களை மதத்தின் அடிப்படையில் பிளக்கும் நடைமுறை, ஜெர்மனியில் ஹிட்லர் கையாண்ட நடைமுறையாகும் என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இத்தகைய பாஜகவின் பிளவுவாத அரசியலைக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு ஏ.எம். ஆரிப் பேசினார். (ந.நி.)