அகர்தலா:
திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லவ் குமார் தேப். உளறல்களுக்குப் பெயர் போனவர். முதல்வராகிப் பேசிய கன்னிப் பேச்சிலேயே, “மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது” என்று கூறி அதிர்ச்சி அளித்தவர்.
“ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள்?” என்று ஆதங்கப்பட்டதாகட்டும், “சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதவேண்டும்” என்று கூறியதாகட்டும்; “வேலையில்லாத இளைஞர்கள் பீடா கடை வைக்க வேண்டும்” என்று இலவச ஆலோசனை வழங்கியதாகட்டும்- குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானவர்.
“குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்று பிப்லவ் தேப் கூறியது பற்றி இப்போது வரை விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ‘இந்தி மொழி’பேச்சுக்காக, கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா-வுக்கு பிப்லவ் தேப் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். “வங்காளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பேசும் போது, அதிகாரிகள் மெதுவாக உதவுவதாகவும், ஆங்கிலத்தில் கேட்கும் போது உடனடியாக செய்கின்றனர்” என்றும் கூறியுள்ள பிப்லவ் குமார் தேப், இதை ஏற்க முடியாது என்று கொதித்துள்ளார். “இந்தியை ஏற்காதவர்கள், இந்தியாவை ஏற்காதவர்கள்” என்று எதுகை மோனையாக பேசியுள்ளார்.