புதுதில்லி:
பணக்காரர்களுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் ஆதரவானதாகவே நமது நாட்டின் சட்ட அமைப்புகள் உள்ளன என்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பேசியுள்ளார்.உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையொட்டி, தீபக் குப்தா-வுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஆற்றிய உரையிலேயே தீபக் குப்தா, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் பேசியிருப்பதாவது:
நம்முடைய சட்டங்களும், சட்ட அமைப்புகளும் பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் ஆதரவாக உள்ளன. பணக்காரர்களோ, அதிகாரவர்க்கத்தினரோ சிறையிலிருந்தால் அவர்கள் விடுதலையாவதற்கு மீண்டும் மீண்டும் உயர் நீதிமன்றங்களை அணுகுவார்கள்.அதேபோல பிணையில் இருக்கும் பணக்காரரும், வழக்கை தாமதப்படுத்த விரும்பினால் அடுத்தடுத்து உயர் நீதிமன்றங்களை அணுகுவார். அல்லது விசாரணையைத் தாமதப்படுத்தவும், அதன் மூலமாக விரக்தி மனப்பான்மையை உருவாக்கவும் அவர் முயல்வார்.
ஆனால் ஒரு ஏழை அவ்வாறாக முயற்சி செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.நாடு, நீதித் துறையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், நீதிபதிகள், நீதித்துறையில் உள்ள பிரச்சனைகளுக்காக, நெருப்புக்கோழியை போல தலையை மண்ணில் புதைத்துக்கொண்டு இருந்துவிட முடியாது. நீதித்துறையின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு நீதிபதிகள் அதனை சரிசெய்ய வேண்டும். நீதித்துறையை எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் ஆபத்தில் கொண்டு சென்றுவிடக் கூடாது.
நெருக்கடியான காலகட்டங்களில் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படும் வாய்ப்புகள் அதிகம். அந்த நேரங்களில் சமானிய மக்கள் வழக்கம் போல குரலற்று போவார்கள். சமானிய மக்களுக்காக எவராவது குரல் எழுப்பினால் அதனை நீதிமன்றம் கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சமானிய மக்களுக்காக ஏதாவது செய்ய முடியுமெனில் அவர்களுக்கான வாய்ப்பினை கொடுக்க வேண்டும் என்று சக நீதிபதிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு நீதிபதி தீபக் குப்தா பேசியுள்ளார்.
உரிய வயதை எட்டாத மனைவியுடன், அவரது சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவும் வல்லுறவுக் குற்றம்தான்; அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்கு குடிமக்களுக்கு முழு உரிமையுண்டு என்பன போன்றவை நீதிபதி தீபக் குப்தா வழங்கிய முக்கியமான தீர்ப்புக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.