tamilnadu

img

பொருளாதாரம் தெரியாதவர்களால் நாடு வீழ்ச்சி அடைந்து விட்டது..

புதுதில்லி:

நாட்டை வழிநடத்துபவர்களுக்கு பொருளாதார அறிவு இருக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால், நாடு கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதற்கு உதாரணம்தான் 5 ஆண்டு கால பாஜக ஆட்சி என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:


கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, நமது பொருளாதாரம் பற்றி எதையுமே யோசிக்காமல், இஷ்டத்திற்கு பல விமர்சனங்களை மோடி முன்வைத்தார். அப்போது, அப்போது மோடியின் பொருளாதார அறிவை, ஒரு அஞ்சல் தலையின் (Postal Stamp) பின்னால் எழுதிவிடலாம் என்று நான் குறிப்பிட்டேன். அப்போது நான் சொன்னது சரி என்பதை காலம் தற்போது நிரூபித்து விட்டது.


ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதற்கும், ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கும் வேறுபாடு உண்டு. அந்நிய செலாவணி விகிதம் உள்ளிட்ட பல விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டிய தேவை ஒரு முதல்வருக்கு இல்லை. அவரைப் பொறுத்தவரை மாநிலத்தின் வரவு - செலவை சரியாக நிர்வகித்தால் போதுமானதாகும். மத்திய அரசின் உதவியை சரியான நேரத்தில் பெற்றால் போதுமானது. இதனால், அவர்களுக்கு அதிகம் கல்வி அறிவு இல்லை என்றாலும் மாநிலத்தை நிர்வகிக்க முடியும். 


பொருளாதாரத்தில் தவறான நிர்வாகம் நடக்கும்போது, அதன் விளைவுகள் விரைவில் தெரியவரும். இதற்கு பணமதிப்பு நீக்கம் ஒரு நல்ல உதாரணம். பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படிக்காதவர்களும் இதை தவறென்று சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், மோடியால் மட்டும் அதை அறிய முடியவில்லை. பணமதிப்பு நீக்கம் தோல்வி என்பதையே மோடி ஒப்புக்கொள்ளவில்லை. 


அடுத்தது தவறான நேரத்தில், தவறான விகிதத்தில் அமலான ஜிஎஸ்டி ஆகும். இவற்றால் பல தொழில்கள் நசிந்து போய்விட்டன.2016-17 ஆம் ஆண்டில், அதாவது பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின், உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவிகிதத்திலிருந்து 7.2 ஆக குறைந்து, தற்போது 7 சதவிகிதம் ஆகியுள்ளது. வரும் ஆண்டில் அது 6.5 சதவிகிதமாக மேலும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பொருளாதாரம் தெரியாதவர்கள் எடுத்த நடவடிக்கைகளால், நாடு வீழ்ச்சி அடைந்ததுதான் மிச்சமாகி விட்டது.இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.