புதுதில்லி:
மத்தியப்பிரதேச சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புநடத்தக்கோரிய மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.மேலும் மத்தியபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்களை பாஜக தனது வெட்கங்கெட்ட குதிரைபேரத்தின் மூலம் விலைக்கு வாங்கியது. எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக பாஜக, ஆளுநர் லால்ஜி தாண்டனிடம் முறையிட்டது. அதையடுத்து, சட்டமன்றத்தில் மார்ச் 16 அன்று ஆளுநர் உரைக்கு பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்வர் கமல்நாத்துக்கு மார்ச் 14 அன்று ஆளுநர் கடிதம் எழுதினார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் மறுத்துவிட்டார். செவ்வாயன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கமல்நாத் அரசுக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார்.இதற்கிடையே முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்பட பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் உச்சநீதிமன்றத்தை அணுகினர். மத்திய பிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தங்கள் மனுவில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூறியிருந்தனர். இந்த மனுவை அவசரவழக்காக செவ்வாயன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.அப்போது, மத்திய பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய தோடு, மனு மீதான விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்தி வைத்தது.