tamilnadu

img

தொழிற்சாலைகளை அழிக்கும் வகையில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார்மயப்படுத்துவதை நிறுத்துக...

புதுதில்லி:
தொழிற்சாலைகளை அழிக்கும்வகையில் மத்திய அரசு, நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியார்மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் இயங்கும் பொதுத்துறை நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத்தையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு அளித்திட மத்திய அரசுமுடிவு எடுத்திருப்பதற்கு எதிராக நிலக்கரிச் சுரங்கங்களில் இயங்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் மற்றும் சம்மேளனங்களும் மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.இந்த முடிவு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்திட நாட்டின் நலன் கருதி நாட்டிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களைத் தேசியமயமாக்கிய குறிக்கோளையே முற்றிலுமாக அழித்துஒழித்துவிடுகிறது. இது நம் பொருளாதாரத்தின் சுய சார்பு அடிப்படையைத் தகர்க்கிறது. நம் நாட்டை அந்நிய மற்றும்உள்நாட்டுத் தனியார் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்திற்கு அடிபணிந்துசெல்லும் விதத்தில் மாற்றிவிடும்.  

தொழிற்சாலைகளை அழிக்கும் செயல்
நிலக்கரி என்பது மின் உற்பத்தி, உருக்கு, அலுமினியம், ரசாயன உரம்மற்றும் சிமெண்ட் போன்ற பல கேந்திரமான தொழில்களுக்கு ஓர் அத்தியாவசியமான இடுபொருளாகும். அத்தகையமுக்கியமான ஒன்றை தனியாருக்குத் தாரை வார்ப்பது, நாட்டில் உள்ள தொழிற்சாலைகளைப் பட்டினிபோட்டு, அழித்துவிடும்.நாட்டில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள 41 நிலக்கரிப் படுகைகளை தனியாருக்குத் தாரைவார்த்திட அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வனப்பகுதிகளில் உள்ளன. இங்கே கோடிக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அரசின்இந்த முடிவு இவர்களின் வாழ்க்கையையே வேருடன் பிடுங்கி எறிந்துவிடும்.

சுற்றுச்சூழல் நெறிமுறைக் கட்டுப்பாடுகள் நீக்கத்துடன் வருகின்ற இத்தகையதனியார்மய முடிவு, கடும் சுற்றுச்சூழல் பாதிப்பினையும் ஏற்படுத்திடும்.கொரோனா வைரஸ் தொற்றைஎதிர்த்து முறியடித்திட வேண்டுமென்றஒரே சிந்தனையுடன் செயல்படுவதற்குப்பதிலாக, திட்டமிடாத தான்தோன்றித்தனமான சமூகமுடக்கத்தால் கோடானு கோடி மக்களின் வாழ்க்கையை அழித்திட்ட பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் இப்போது இந்த நிகழ்ச்சிநிரல் மூலம் மக்களை, குறிப்பாக
தொழிலாளர் வர்க்கத்தின் மீதான சுரண்டலை மேலும் உக்கிரப்படுத்தும் விதத்தில் இதனைக் கொண்டு வந்திருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, நாட்டின் நலன்கருதி, மத்திய அரசு இதனை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றுகோருகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)