புதுதில்லி:
உளவு மென்பொருள் வாட்ஸ்ஆப்பில் ஊடுருவிய விவகாரம் குறித்து மே மாதத்திலேயே இந்திய அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது என்றும் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி, வாட்ஸ்அப் செயலி வழியாக ஊடுருவி, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த பயனாளர்கள் குறிவைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. முக்கியமாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்களின் மொபைல் போன் செயல்பாடுகள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.இதுதொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம், இஸ்ரேலை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.இதன் மூலமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து உரிய விளக்கம்அளிக்குமாறு மத்திய அரசு, வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்தியாவில் சிலபயனாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய வாட்ஸ்ஆப் உளவுமென்பொருள் ஊடுருவல் விவகாரம் குறித்து, சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகளுக்கு கடந்த மே மாதமே தெரிவித்துவிட்டதாகவும் உளவு மென்பொருளால் பாதிக்கப்பட்ட பயனாளர்களையும் எச்சரித்ததாகவும் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுத்ததாகவும் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.வாட்ஸ்ஆப் பயனாளர்களின் தகவல்களை பாதுகாக்க உறுதிபூண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் வாட்ஸ்ஆப்
தெரிவித்த தகவல், தொழில்நுட்ப குறியீடுகளாக இருந்ததாகவும், பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்தோ, இந்திய பயனாளர்கள் குறிவைக்கப்பட்டது குறித்தோ அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.