புதுதில்லி:
சபரிமலை பிரச்சனையை விசாரிக்க விரிவான அமர்வு அமைக்கப்பட்டது தவறல்லஎன உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இதற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது. திங்களன்று (பிப்.10) அளித்த இந்த தீர்ப்பில் சபரிமலை வழக்கில் தீர்வு காண வேண்டிய 7 கருத்துகளை வரையறுத்துள்ளது. இரண்டு பகுதிகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெறும். முக்கிய
வாதங்களை முன்வைப்பது யார் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். வாதங்களுக்கும் எதிர் வாதங்களுக்கும் குறிப்பிட்ட கால அளவை தீர்மானிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசமைப்பு சாசனத்தின்படி மத சுதந்திரத்தின் எல்லை எது என்பது தீர்வு காண வேண்டிய முதலாவது கருத்து. அரசமைப்பு சாசனத்தின் 25 ஆவது பிரிவின் கீழ் மத சுதந்திரத்தின் எல்லை எது?. அரசமைப்பு சாசனத்தின் 25 ஆவது பிரிவில் கூறப்படும் ‘ஒழுக்கம்’ (Morality) என்பதன் பொருள் என்ன?. பிரிவு 25 வழங்கும் மத சுதந்திரத்துக்கான உரிமை பிரிவு 26இல் கூறப்பட்டுள்ள, குறிப்பிட்ட மத பிரிவினருக்கான உரிமைகள் எவ்வாறு மற்ற அடிப்படை உரிமைகளுடன் தொடர்பு உடையதாகிறது?
மத சுதந்திரம் ,குறிப்பிட்ட மத பிரிவினருக்கான (Religious denomination) சுதந்திரம் இவற்றுக்கு இடையிலான உறவு என்ன? குறிப்பிட்ட மத பிரிவினருக்கென அடிப்படை உரிமைகள் இருக்க முடியுமா ? மத சமூகத்திற்கு வெளியே உள்ள ஒருவர் பொது நல வழக்குகளின் மூலம் மத நடைமுறைகளை கேள்வி கேட்க முடியுமா? இவையே தீர்வு காணப்பட வேண்டியவை என உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது.