புதுதில்லி:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், அரசியல் சாசனத்திற்கு விரோதமான திருத்தங்களை, மோடி அரசு கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தன்னிச்சையாக திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.இந்நிலையில், மோடி அரசு கொண்டுவந்த, தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்தமசோதாவை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் எந்தக் கேள்வியும் இன்றிஆதரித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, 3 மாநில முதல்வர்களின் செயலுக்கு, மத்திய முன்னாள் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, ஆச்சரியமும் அதிருப்தியும் தெரிவித்துள்ளார். பாஜக அரசின் சட்டத் திருத்தத்தை மாநிலங்களவையில் ஆதரித்ததற்கான காரணத்தை, இந்த மூன்று முதல்வர்களும் அறிக்கையாக வெளியிட வேண்டும்என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்துள்ளார்.“இந்த மோசமான - அரசியல் சாசனத்திற்கு விரோதமான ஒரு சட்டத்தை ஆதரிக்க 3 முதல்வர்களையும் நிர்ப்பந்தப்படுத்தியது எது? ஒருவேளை மத்திய அரசு மீதான பயத்தின் காரணமாக ஆதரித்தார்களா?அவ்வாறு இல்லாவிட்டால், தகவல் ஆணையரின் சுதந்திரத் தன்மையையும், மாநிலங்களின் உரிமைகளையும் காவு கேட்கும் இந்த சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அவர்கள் தங்கள் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று நினைக்கிறார்களா? உண்மையில், 3 முதல்வர்களும், தங்கள் மாநிலங்களின் இறையாண்மையைத்தானே தற்போது காவு கொடுத்துள்ளனர்.
மூன்று முதல்வர்களில் ஒருவர் மீது சிலவழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின் றன, என்பது புரிந்தாலும், மற்ற இருவர் எதற்காக, மோசமான இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும்? எதற்காக தில்லி சுல்தானியத்திடம் சரணடைய வேண்டும்?” என்றும் ஸ்ரீதர் ஆச்சார்யலு கேள்விகளை அடுக்கியுள்ளார்.