புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் சமீபகால நடவடிக்கைகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தங்களைப் போன்ற கட்சிகளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்று சிரோமணி அகாலிதளம் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நரேஷ்குஜ்ரால். அண்மையில் இதுதொடர்பாககூறியிருப்பதாவது:
கூட்டணி கட்சிகளை எவ்வாறுநடத்த வேண்டும் என்பதை, இன் றைய பாஜக தலைமையானது, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். வாஜ்பாயைப் போல நட்பு நாடுகளையும் மதிக்க வேண்டும்.கிட்டத்தட்ட 20 கட்சிகளுடன்சேர்ந்து ஒரு கூட்டணி ஆட்சியைவாஜ்பாய் வெற்றிகரமாக நடத்தினார். அப்போது எல்லோருக்கும் மரியாதை வழங்கப்பட்டதால், அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். கூட்டணி கட்சிகளுக்குவாஜ்பாயின் கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன. வாஜ்பாயிடம் அந்த பாடங்களைக் கற்றுக்கொண்ட ஒரே பாஜக தலைவர்- அண்மையில் மறைந்த அருண் ஜெட்லி மட்டும்தான். அவர் இருந்தவரை, கூட்டணி கட்சிகளுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன. துரதிர்ஷ்டவசமாக அவரது மறைவுக்குப் பிறகு, உண்மையில் அந்தக் கதவுகள் செயல்படவில்லை.பாஜகவை ஆதரிக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சி மத்தியஅமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் படாவிட்டால், பாஜகவுக்கு அளித்துவரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வது குறித்து நிச்சயமாக ஆலோசிப்போம்.இவ்வாறு நரேஷ் குஜ்ரால் கூறியுள்ளார்.