புதுதில்லி, ஏப். 1- கிழிந்த மழைக்கோட்டு, தலையில் ஹெல்மெட் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்புக் கருவிகள் இவைதான். நாட்டின் பொது சுகாதார அமைப்பு எந்த அளவுக்கு தோல்வி அடைந்துள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கொல்கத்தா நகரின் முக்கிய கொரோனா வைரஸ் சிகிச்சை மையமான பெலியகட்டா தொற்று நோய் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை பரிசோதிக்கும் இளநிலை மருத்துவர்களுக்கான பாதுகாப்புக் கருவியாக (பிபிஇ) வழங்கப்பட்டது பிளாஸ்டிக் மழைக்கோட்டு. இது தொடர்பான செய்தியும் படமும் சர்வதேச செய்தி முகமையான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. ‘என்-95’ முகக் கவசங்கள் இல்லாததால் இருசக்கர வாகன தலைக்கவசங்களை (ஹெல்மெட்) பயன்படுத்தி வருகின்றனர். ஹரியாணா இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர் சந்தீப் கார்க் இதை உறுதி செய்தார். ஆனால் மத்திய சுகாதார அமைச்சரகம் இதுகுறித்து கருத்து எதையும் கூறவில்லை. ஹரியாணாவில் ரோதக் நகரத்தின் அரசு மருத்துவமனையில் தேவையான பாதுகாப்புக் கருவிகள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்து வருகிறார்கள். இங்குள்ள மருத்துவர்கள் கொரோனா நிதி திரட்டத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு மருத்துவரும் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி அதில் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முடிவு செய்துள்ளனர்.