tamilnadu

புதுச்சேரியில் 92.94 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரி,ஏப்.19- பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரியில் 92.94விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.94 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டை விட 5.62 விழுக்காடு அதிகம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தம் 14,694 மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 13,657 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 6,236 பேர், மாணவிகள் 7,421 பேர் அடங்குவர். தேர்ச்சி விகிதம் 92.94 சதவீதம் ஆகும். இது கடந்தாண்டை விட 5.62 சதவீதம் அதிகம்.

அரசு பள்ளிகள்...

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற 2,677 மாணவர்கள், 3,754 மாணவிகள் என மொத்தம் 6,431 பேர் தேர்வு எழுதினர். இதில் 2091 மாணவர்கள், 3,415 மாணவிகள் என மொத்தம் 5,506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு விகிதம் 85.62 சதவீதமாகும். இது கடந்தாண்டவிட 11.86 சதவீதம் அதிகமாகும். அதேபோல் தனியார் பள்ளிகளில் பயின்ற 4,231 மாணவர்கள், 4,032 மாணவிகள் என மொத்தம் 8,263 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,145 மாணவர்கள், 4006 மாணவிகள் என மொத்தம் 8,151 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 98.64 சதவீதம் ஆகும்.ஏற்கனவே, நடைமுறையில் இருந்து 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக, புதிய திட்டத்தின் கீழ் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் முதல்முறையாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.