புதுதில்லி:
“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஐ.என்.எஸ் விராட் போர்க் கப்பலை, தனது குடும்ப சுற்றுலாவுக்காக பயன்படுத்தினார்” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், “இந்திய விமானப் படை ஜெட்களை, தேர்தலுக்காக தனது டாக்சி போல பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார்; அதுவும் 744 ரூபாய் வாடகைக்கு” என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் வெள்ளியன்று இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது, “பிரதமர் மோடிக்காக பாஜக, இந்திய விமானப்படை ஜெட்களை 240 முறை வாடகைக்கு எடுத்துள்ளது என்றும், இந்த மொத்த பயணத்துக்கும் 1.4 கோடி ரூபாய் கொடுத்துள்ளது” என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி, அரசு வேலைக்காத்தான் ஐஎன்எஸ் விராட் கப்பலை பயன்படுத்தினார் என்றும், இதுகுறித்து ஓய்வுபெற்ற துணை அட்மிரல் வினோத் பஸ்ரிசா விளக்கியும், மோடி அவதூறு பரப்புகிறார் என்றால், 5 ஆண்டுகளில் சாதனை என்று எதையும் சொல்ல முடியாததால், இப்படி எதை எதையோ பேசிவருகிறார் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.