புதுதில்லி:
கொரோனா வைரஸ் ஒழிப்பில் முக்கியமாகத் தேவைப்படும் ஆல்ஹலால் கலந்த கை சுத்திகரிப்பு திரவம் (சானிடைசர்) தயாரிக்க அரிசியை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பில் முக்கியமானது கையை சுத்தம் செய்வதாகும். அதற்கு சானிடைசர் அதிகமாகத் தேவைப்படுகிறது. அந்தத் தேவையை நிறைவு செய்ய அரிசியின் மூலம் சானிடைசர் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அரிசியின் மூலம் எத்தனால் தயாரித்தால் அதை சானிடைசருக்கும், பெட்ரோலில் கலக்கவும் பயன்படுத்த முடியும். இதற்காக இந்திய உணவுக் கழகத்திலிருந்து உபரியாக இருக்கும் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து எத்தனால் பெற முடிவு செய்யப்பட்டது. இதற்கான முடிவு தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் முன்னிலையில் திங்களன்று எடுக்கப்பட்டது.
இந்தத் தகவலையறிந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தமது ட்விட்டரில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதில் "ஏழை மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சானிடைசர் தயாரிக்க அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கிறது. இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போது விழிப்படைவார்கள்? நீங்கள் பசியில் செத்து மடிகிறீர்கள். ஆனால், அவர்கள் பணக்காரர்கள் கைகளைக் கழுவுவதற்காக உங்களுக்காக வைத்திருக்கும் அரிசியை சானிடைசர் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2018 இன் படி, வேளாண் அமைச்சகம் எதிர்பார்த்ததை விட ஒரு பயிர் ஆண்டில் அதிக உணவு தானியங்கள் வழங்கப்பட்டால், தேசிய உயிர் எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த அதிகப்படியான தானியங்களை எத்தனாலாக மாற்றும். ஒப்புதல் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.