tamilnadu

img

வன்முறையில் ஈடுபட்ட கயவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்? தில்லி காவல் ஆணையருக்கு பிருந்தா காரத் கடிதம்

புதுதில்லி:
தில்லியின் வட கிழக்குப் பகுதியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட கயவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் என்று தில்லி காவல்துறை ஆணையரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:தலைநகரின் வட கிழக்குப் பகுதியில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும் அதனை யொட்டி கைதுகள் தொடர்பாகவும் இக்கடிதத்தை எழுதுகிறேன். இந்தசம்பவங்கள் தொடர்பாக 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வும், எண்ணற்றோர் கைது செய்யப்பட்டிருப்ப தாகவும் பத்திரிகைகளில் பார்த்தேன். வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயம்அடைந்த பலரது குடும்பங்களை நான் சென்று பார்த்தேன். அவர்கள் கூறிய கூற்றுக்களின்படி, அவர்களால் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புக்குக் காவல்துறையினரிடம் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய முடியவில்லை என்பதும்,   மேலும் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தங்களிடம் எதுவும் கூறவில்லை என்பதுமேயாகும்.

இதுதொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41-சி பிரிவு மிகவும் தெளிவாக இருக்கிறது. அதன்படி, “(1) அனைத்து மாவட்டங்களிலும் ஒரு காவல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட வேண்டும், (2) கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் மற்றும்அவர்களைக் கைது செய்த காவல் அதிகாரியின் பெயர் மற்றும் பதவி ஒட்டப்பட்டிருக்க வேண்டும். (3) மாநில அளவில் இயங்கும் காவல்துறையினரின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை, கைது செய்யப்பட்ட நபர்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்து, அவர்கள் புரிந்திட்ட குற்றத்தின் விவரங்களுடன் பொது மக்களின் தகவலுக்காக தரவுகளை நிர்வகித்திட வேண்டும்.”சட்டம் மிகவும் தெளிவாக உள்ள போதிலும்,காவல் கட்டுப்பாட்டு அறையில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள், முகவரிகள் ஒட்டி வைக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, எந்த காவல்நிலையத்திலும் அதுபோன்ற விவரங்களும் ஒட்டி வைக்கப்படவில்லை.

நடந்துள்ள நிகழ்வுகள் மற்றும் தற்போதுள்ள சூழ்நிலைகளின் பின்னணியில் சட்டத்தின் நடைமுறையைக் கறாராக அமல்படுத்த வேண்டியது அவசியம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவ்வாறு கடைப்பிடித்தால்தான் தேவையற்ற வதந்திகள் பரவாமல் தடுத்திட முடியும்.எனவே இவ்வாறான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உத்தரவாதப்படுத்திட, இப்பிராந்தியத்தில் இயல்புவாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்,இவ்வாறு பிருந்தாகாரத் கடிதத்தில் கூறியுள்ளார். (ந.நி.)