tamilnadu

மின் கட்டண உயர்வை அனுமதிக்கக்கூடாது: புதுவை முதல்வருக்கு சிபிஎம் வேண்டுகோள்

புதுச்சேரி, மே 30-மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண் டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-புதுச்சேரி அரசு பல்வேறு வழிகளில் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது. ஏற்கனவே மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் கட்டணம், சொத்து, குப்பைகளுக்கு வரி உயர்த்தப்பட்டன. இந்த வரி உயர்வால் ஏழை-எளிய மக்கள், சிறு வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், திரும்பவும் மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை களை அரசு மேற்கொண்டுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.இந்த கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டியதன் அவசியம் குறித்து மாநில முதலமைச்சருடன் சிபிஎம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின் கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் உறுதியளித்தார். இதை அவர் அமலாக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.