தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில், ஒரு போலீசார் பெயரை கூட சேர்க்கவில்லை. இந்த நிலைமையில் விசாரணை நடைபெற்றால் எப்படி நியாயம் கிடைக்கும் என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் புதனன்று கனிமொழி தனது உரையில் கூறியதாவது: தூத்துக்குடி யில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், நாட்டின் மனசாட்சியையே உலுக்கியது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. 13 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் மருத்துவமனைகளில் பலியாகினர். மொத்தம் பலியானவர் எண்ணிக்கை 16.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. நான்கு மாதங்களில் விசாரணை முடிவடைய வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரி விக்கப்பட்டது. ஆனால் துப்பாக்கி சூடு நடைபெற்று ஓராண்டு கழிந்த பிறகும், உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டு, 10 மாதங்கள் கழிந்து விட்ட நிலையிலும், சிபிஐ இன்னும் விசாரணையை முடிக்கவில்லை. சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில், ஒரு போலீசார் பெயரை கூட சேர்க்கவில்லை. இந்த நிலைமையில் விசாரணை நடை பெற்றால், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தூத்துக்குடி மக்கள் எப்படி நம்புவார்கள்?
தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து. விசாரணை நடத்துவதற்காக ஒரு குழுவையும் கூட அனுப்பி வைத்தது. ஆனால்
தமிழக அரசு சொன்னதை, மட்டும் கேட்டுக்கொண்டு விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், காயமடைந்த வர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்களால் உரிய சிகிச்சை பெற முடிய வில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியும் கூட திருப்திகரமானதாக இல்லை. எனவே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், காயமடைந்தோர் மற்றும் கொலை செய்யப்பட்டோருக்கு, நியாயம் கிடைக்க வேண்டும். 17வயது ஸ்னோலின் என்ற இளம்பெண் உட்பட பல இளைஞர்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டுள்ளனர்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.