tamilnadu

img

இன்று அகில இந்திய எதிர்ப்பு தின போராட்டம் இனி வெட்டிப் பேச்சு வேண்டாம்! மக்களுக்கு உணவும், பணமும் தருக!

அரசுக்கு சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா வலியுறுத்தல்

புதுதில்லி, ஏப்.20- இனியும் வேண்டாம் வெட்டி ப்பேச்சு, பசி-பஞ்சம்-பட்டினியில் வாடும் மக்களுக்கு உணவும், பணமும் தந்து ஆதரித்திட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமையன்று அகில இந்திய எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. காலை 10.30 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அணிதிரளுமாறு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சிஐடியு-வின் அகில இந்திய தலைவர் ஹேமலதா அறைகூவல் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசாங்கம், சமூக முட க்கக் காலத்தை மே 3 வரைக்கும் நீட்டித்தி ருக்கிறது. இவ்வாறு இதனை நீட்டித்த சமயத்தில் பிரதமர் மக்களுக்கு ஏழு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். ஆனால், சமூக முடக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கோடானுகோடி மக்களுக்கு தங்கள் வருமானங்களை இழந்து, பசி-பஞ்சம்-பட்டினிக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு நிவாரணம் அளித்திட,  அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒரு வரி கூட அவர் தெரிவித்திடவில்லை. பிரதமர் கூறிய அறிவுரைகளை குடும்பங்களின் மூத்த உறுப்பினர்கள் நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு அளிக்க முடியாத நிலையில் இருக்கி றார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி அறிவுரை எதையும் பிரதமர் கூறவில்லை.

தொழிலாளர்கள்-விவசாயிகள் கடும் பாதிப்பு

தொழிலாளர்கள், அதிலும் குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்களும், முறைசார்ந்த துறையில் வேலைசெய்து வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள், நீம் (NEEM-National Employment Enhancement Mission) தொழிலாளர்கள், அப்ரண்டி ஸ் தொழிலாளர்கள், பயிற்சி பெறுபவர்கள் போன்றவர்களும், கட்டுமானம், செங்கல் சூளைகளில் வேலை செய்துவந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களும், நுண்ணிய மற்றும் சிறுதொழில்பிரிவுகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்களும், வீட்டு வேலை செய்து வந்த தொழிலாளர்களும், சிறுகுறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பசி பட்டினியால் 200 பேர் பலி

முறைசார்ந்த துறையில் வேலை பார்த்து வந்த நிரந்தரத் தொழிலா ளர்களும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும், இதழாளர்களும் கூட விட்டுவைக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் நிறுவனங்கள் மூடல், பதவியிலிருந்து நீக்கம், ஊதிய வெட்டு, போன்றவை தனியார் துறைகளில் மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து, கார்ப்பரேட்டுகள் ஊடகங்கள் வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே, தொழிலாளர்கள் பொருளாதார மந்தத்தின் விளைவாகக் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தார்கள். சமூக முடக்கம் அறிவிக்க ப்பட்டு, 27 நாட்கள் கடந்த பின்பும்,  புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பல இடங்களில் வீதிகளில் நிர்க்கதியாய் பசி-பஞ்சம்-பட்டினியோடு நின்று கொண்டிரு க்கிறார்கள். எங்கிருந்து தங்களுக்கு உணவு வரும் என்று அவர்களில் எவருக்கும் தெரியவில்லை. இவர்கள் வெகு தொலைவில் உள்ள தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்லும்போது, உண்ண உணவின்றி, பசி-பஞ்சம்-பட்டினி யால் சுமார் 200 பேர் இறந்துள்ளனர்.  

புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதவிப்பு

தலைநகரின் வெகு அருகில் உள்ள குருகிராமில் ஏப்ரல் 16 அன்று புலம்பெயர் தொழிலாளி முகேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது நாட்டில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. பெயிண்ட்ர் வேலை பார்த்து வந்த அவர், இரண்டு மாதங்களாக வேலையில்லாமல் தன்னி டம் இருந்த அற்பத்தொகையையும் செலவு செய்த பின்னர், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  தன்னிடம் இருந்த செல் போனை, 2500 ரூபாய்க்கு விற்று அதில் குடும்பத்திற்கு வேண்டிய கோதுமை மாவு, அரிசி, சீனி போன்றவற்றையும் தன்னுடைய குழந்தைகள் வெயில் கொடுமை யிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு டேபிள் பேனையும் வாங்கித் தந்து விட்டு, மீதித்தொகையை தன் மனைவி யிடம் கொடுத்துவிட்டு, தனது குடிசைக்குள் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரைச் சுற்றியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருமே தங்களிடம் ரேசன் கார்டுகள் இல்லாததால் தங்களுக்கு எவ்விதமான ரேசன் பொருள்களும் தரப்படுவதில்லை என்கின்றனர்.

சுகபோகத்தில் முதலாளிகள்-மெல்லச்சாகும் மக்கள்

முதலாளித்துவ வர்க்கம், பெரும் கார்ப்பரேட்டுகள், வர்த்தகப் பிரிவினர் தங்கள் வீடுகளில் அமர்ந்து கொண்டு, புதுப்புது உணவுகளாக தயாரித்து தங்கள் குடும்பத்தினருடன் சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் அதே சமயத்தில், இந்த நாட்டின் செல்வத்தை உருவாக்கித்தரும், சமூகத்தின் சக்கரங்களைச் சுழற்றிக்கொண்டிருந்த கோடானுகோடி தொழிலாளர்கள், தங்குவதற்கு இடமின்றி, பட்டினி கிடந்து மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சேவைகள் இந்த சமூகத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.  ஆனாலும் அவர்கள் எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தங்கள் உயிரைப் பயணம் வைத்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர சுகாதார ஊழியர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். மருத்து வமனைகள் கூட மூடப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. அடிப்படைப் பணிகளில் ஈடுபட்டுள்ள துப்புரவு ஊழியர்கள் எவருக்கும் முகக் கவசங்கள் அளிக்கப்படவில்லை.

கிராமப்புறத்தில் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்தாலும் சந்தைப்படுத்த முடியாமலும் மாபெரும் அளவில் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகைகள் கூட அளிக்கப்படவில்லை. வேலையில்லா காலத்திலும் ஊதியம் அளிக்கப்படக்கூடிய விதத்தில் ஒரு ஷரத்து உருவாக்க வேண்டும் என்று கோரி வருகிறோம். வேலைவாய்ப்பு உத்தரவாதச்சட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட இவை அனைத்தும் அவசியமாகும்.

பெண்கள் மீது அதிகரிக்கும் வன்முறை

குடும்பத்தினர் அனைவரும் வீடுகளில் முடங்கியிருப்பதைத் தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறை மிகவும் ஆபத்தான அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

இப்பிரச்சனைகள் எதைப்பற்றியும் இந்த அரசாங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பொருளாதார அறிஞர்களும், அறிவியலாளர்களும் பரிந்துரைத்துள்ளதுபோல், மத்தியத் தொழிற் சங்கங்களும், தேசிய அளவிலான விவசாய சங்கங்களும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் குறைந்தபட்சம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5-6 சதவீதம் நிவாரணத் தொகுப்பு அளித்திட வேண்டும் என்று கோரி வருகின்றன. பிரதமரோ முழுமையாக இதனை உதாசீனம் செய்து வருகிறார்.

மாறாக, சமூக முடக்கத்தைப் பயன்படுத்தி மறைமுகமாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. தொழிற்சாலை சட்டத்தைத் திருத்தி, தொழிலாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற முடிவெடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தங்கள் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கும் விதத்தில் தொழிலாளர்களை அடிமைகளாக்குவதற்கான நடவடிக்கை களில் இறங்கி இருக்கிறது.

முதலாளிகளுக்கு விசுவாசமான மோடி அரசு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தங்களின் லாபம் 10 சதவீதம் அளவிற்கு வீழ்ந்துவிட்டதாக இந்தியத் தொழில்களின் கூட்டமைப்பு (சிஐஐ) மதிப்பிட்டிருக்கிறது.  இவர்களின் லாபம் துடைத்தெறியப்படவில்லை என்பதைக் குறித்துக் கொள்ளவும். ஒரு பத்து சதவீத லாபம் குறைவதைக்கூட இவர்கள் தாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அனைத்தையும் தொழி லாளர்கள் மீதே தள்ளுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். இது, முதலாளித்துவத்தின் மிகவும் நிர்வாணமான சித்திரமாகும்.  

பொருளாதார மந்தத்தால் ஏற்கனவே கடும் பாதிப்புக்கு ஆளாகியிருந்த தொழிலாளி வர்க்கத்திற்கு இப்போது குரோனா வைரஸ் தொற்றாலும் கடும் அடி விழுந்திருக்கிறது. இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பினும், இவர்களுக்கு உருப்படியான நிவாரணம் அளித்திட மோடி அரசாங்கம் முன்வராமல், தொழிலாளர்களுக்கு பசப்பு வார்த்தை களை மட்டுமே கூறிவிட்டு, தங்கள் முதலாளிகளின் பணப் பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறது.

பெரும் பணக்காரர்களுக்கு வரி விதித்திடுக

முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, கிரேட் பிரிட்டன் போன்றவைகள் கூட தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 முதல் 17 சதவீத அளவிற்கு நிவாரணத் தொகுப்புகளை அளித்திருக்கிற அதே சமயத்தில், நம் நாட்டிலோ வெறும் 0.85 சதவீதமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, சிஐடியு, பிரதமரிடம் ஜன் தன் கணக்கு மூலமாக வருமான வரி செலுத்தாத 21 கோடி மக்களுக்கு 7,500 ரூபாய் வங்கி மாற்றல் செய்திட வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அரசு கஜானாவிற்கு 1,57,500 கோடி செலவாகும். அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 முதல் 6 சதவீதம் ஒதுக்குமானால் இத்தொகை 8,50,000 கோடி ரூபாயிலிருந்து 10,20,000 கோடி ரூபாயாக இருக்கும்.

இதனைச் செய்திட அரசு முன்வர வேண்டும். இதற்காக இது பெரும் பணக்காரர்களுக்கு வரி விதித்திட வேண்டும். அதன்மூலம் வேலையின்மை மற்றும் வறுமையை ஒழித்திட முன்வர வேண்டும். சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அளித்திட வேண்டும்.

பிரதமரின் செவிகளுக்கு....

நாம், பிரதமர் கேட்டுக்கொண்டபடி, பானைகளையும், தட்டுகளையும் தட்டிப்பார்த்துவிட்டோம். விளக்குகளைக் கொளுத்திப் பார்த்துவிட்டோம். எனவேதான் இப்போது நாங்கள் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை அன்று அகில இந்திய எதிர்ப்பு நாள் அனுசரிக்கிறோம்.

எங்கள் கோரிக்கைக்குப் பிரதமர் செவி சாய்க்க வேண்டும். ஏற்கனவே விவசாய சங்கங்களும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும், மாதர் சங்கங்களும், வாலிபர் சங்கங்களும் மாணவர் சங்கங்களும் இதே கோரிக்கைக்காக ஒருமைப்பாட்டைத் தெரிவித்துவிட்டனர்.  இவ்வாறு மக்களின் ஒன்றுபட்ட குரல்கள் எங்கள் சங்கங்களின் கொடிகளுடன் செவ்வாய் அன்று எழுப்பப்படும். இது, பிரதமர் இப்பிரச்சனை மீது மீண்டும் தொலைக்காட்சியில் பேசுவதற்கு முன், அவருடைய செவிகளுக்குச் சென்று அடையும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

(ந.நி.)