புதுதில்லி:
மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசு மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அராஜகத்தனமான முறையில் செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சியினர் கண்டித்துள்ளனர்.இந்நிலையில் என்பிஆர் எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆவணமும் அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு தனிநபர்கள் தாமாக முன்வந்து தரும் ஆவணங்களே போதுமானவை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சகம், பெற்றோரின் பிறப்பிடம் உள்ளிட்ட21 விவரங்கள் கேட்கப்படும் எனத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.