புதுதில்லி, மே 2 - ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, மே 2-ஆம் தேதியோடு மோடி அரசு நிறுத்திக் கொள்வதால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் கடுமையாக உயரும் நிலை ஏற் பட்டுள்ளது.ஈரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை முறித்துக்கொண்ட அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. உலக நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்றும், மீறி வாங்கினால், அந்த நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது. எனினும், ஈரானிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா,சீனா, துருக்கி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 6 மாதம் அவகாசம் வழங்குவதாகவும், அதற்குள் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா கெடுபிடி விதித்தது.இந்நிலையில், அமெரிக்கா கூறிய 6 மாதகால அவகாசம் மே 2-ஆம் தேதியோடு முடிவுக்கு வருவதால், இனி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத கட்டத்தில் இந்தியா நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் கடுமையாக உயரும்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலம் வரை 40 டாலர் அளவிற்கு கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. ஆனால், கடந்த ஏப்ரலில் கச்சா எண்ணெய் விலை 70 டாலர்களை எட்டியது. இந்த சூழலில் ஈரான் உடனான வர்த்தகத்தை முறித்துக் கொள்வது, இந்தியாவுக்கு மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.இந்தியா இனிமேல் சவூதி, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து மட்டுமே எண்ணெய் வாங்க முடியும் என்றாலும், இவர்கள் ஈரான் போல குறைவான விலைக்கு கச்சா எண்ணெய்யை விற்கமாட்டார்கள்.
அதிலும் ஈரான் மீதான பொருளாதாரத் தடை காரணமாக, அதை சாதகமாக பயன்படுத்தி, இந்த நாடுகள் எண்ணெய் விலை பலமடங்கு கூட்டவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகவிலை கொடுத்தே அந்நாடுகளிடம் எண்ணெய்யை வாங்கியாக வேண்டும். பொதுவாக வெளிநாடுகள் உடனான வர்த்தகம் டாலர் மூலமாகவே மேற்கொள்ளப்படும். ஈரான் இந்திய ரூபாயிலேயே கச்சா எண்ணெய்யை விற்று வந்தது. அந்தச் சலுகையும் தற்போது பறிபோய் விட்டது. இனிமேல் டாலர் பரிவர்த்தனையிலேயே வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதால், கூடுதலான டாலர்களை இருப்பு வைக்கவேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உருவாகியுள்ளது. அவ்வாறு செய்யும்போது, பணவீக்கமும், அதைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயரும் என்பதால், ஒட்டுமொத்தமாக இந்திய பொருளாதாரம் மோசமான பாதிப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்திய அரசு, தன்னுடைய கச்சா பெட்ரோலிய எண்ணெய்த் தேவையில் பெரும் பகுதியை வெளிநாடுகளிடம் வாங்கித்தான் சமாளிக்கிறது. அதிலும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா மூன்றாமிடத்தில் இருக்கிறது.எண்ணெய் வாங்குவது மட்டுமல்லாமல்; அந்நாட்டுடன் காலங்காலமாக நெருங்கிய உறவை இந்தியா கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் பல்வேறுஒப்பந்தங்களையும் செய்துகொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் எரிபொருள் கொண்டு செல்லும் திட்டம் அவற்றில் ஒன்றாகும். அதுவும் இனிமேல் நடக்க வாய்ப்பில்லை என்றாகி இருக்கிறது.“ஐக்கிய நாடுகள் சபையின் தடையைத் தவிர, பிற நாடுகள் ‘தன்னிச்சையாக’ அறிவிக்கும் தடைகளைப் பொருட்படுத்த மாட்டோம்” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், “தடையைப் பொருட்படுத்தாமல் ஈரானுடன் உறவைத் தொடர்வோம்” என்றுபிரதமர் மோடியும் முன்பு கூறியிருந்தனர். ஆனால், தற்போது சத்தமில்லாமல் அவர்கள் பின்வாங்கியுள்ளனர். ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோவிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துள்ளார். ஆனால், அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை.