புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடியை, ‘இண்டியாஸ் டிவைடர் இன் சீப்’ (இந்திய பிளவுவாதிகளின் தலைவர்) என்று விமர்சித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகை வெளியிட்ட கட்டுரை பாஜக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கான 6-ஆவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில் இந்த கட்டுரை வெளியாகி இருப்பதால், கடும் ஆத்திரமடைந்துள்ள அவர்கள், ‘டைம்’ பத்திரிகை கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர் மீது வன்மத்துடன் பாய்ந்துள்ளனர். விக்கி பீடியா பக்கத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் ஆதிஷ் தஷீரை குதறியெடுத்துள்ளனர்.
இந்தியப் பத்திரிகையாளர் தல்வீன் சிங்கின் மகனான ஆதிஷ் தஷீர், பிரிட்டனில் பிறந்தவர். எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இந்நிலையில், அவர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதியதற்காக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி முதல் கீழ்மட்ட தலைவர்கள் வரை பலரும் ட்விட்டரில், தஷீரை திட்டித் தீர்த்துள்ளனர்.
விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் உள்ளே புகுந்து எடிட் செய்ய முடியும் என்பதால், பாஜகவினர் அதைப் பயன் படுத்தி, ஆதித் தஷீர் பற்றிய விவரங்களை மாற்றியமைத்து, காங்கிரசின் மக்கள் தொடர்பு மேலாளர் என்று சாடியுள்ளனர்.