புதுதில்லி:
உள்நாட்டு கோதுமை சாகுபடியாளர்களை பாதுகாக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதி வரியை 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதாக மோடி அரசு அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகியுள்ள இதுதொடர்பான அறிவிப்பில், இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால், திறந்த சந்தையில் கோதுமை விநியோகம் அதிகரிக்கும், அதிகப்படியான தானியங்கள் சந்தையில் புழங்கும்; இந்திய மற்றும் மாநில அரசுகளின் கோதுமை சேமிப்பும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.இந்தியாவிலுள்ள மாவு ஆலைகள், வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் பல லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்கின்றன. வெளிநாட்டு கோதுமை மலிவாக கிடைப்பதால், உள் நாட்டு விவசாயிகளிடமும் மிகக் குறைந்த விலைக்கே, கோதுமையை மாவு ஆலைகள் விலை பேசுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காதது மட்டுமன்றி, அவர்கள் கோதுமை சாகுபடியையே கைவிடும் நிலை ஏற்படுகிறது. உள்நாட்டு கோதுமை உற்பத்தியும் குறைந்து போகிறது.
இந்நிலையிலேயே, விவசாயிகளின் ஆதரவைப் பெறும் வகையில், இறக்குமதி கோதுமைக்கு மோடி அரசு 10 சதவிகிதம் கூடுதல் வரி விதித்து, அவர்களை தாஜா செய்ய முயன்றுள்ளது.கடந்த மார்ச் 2017-ம் ஆண்டு 10 சதவிகிதம், 2018-இல் 10 சதவிகிதம் என்று அதிகரிக்கப்பட்ட இறக்குமதி வரியை, தற்போது மேலும் 10 சதவிகிதம் அதிகரித்து 40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.கோதுமை விவசாயிகள், கடந்த ஆண்டு திறந்தவெளி சந்தையின் மூலம் 7 மில்லியன் டன் கோதுமையை விற்பனை செய்தனர். நடப்பாண்டு அது 10 மில்லியன் டன் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.