புதுதில்லி:
போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கான இயக்குநராக சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுடன், அஸ்தானாவுக்கு ஏற்பட்ட மோதல்,கடந்த 2018 நவம்பரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, அஸ்தானா, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் புதனன்று கூடிய, பணி நியமனங்களுக்கான, கேபினெட் கமிட்டியானது, அஸ்தானாவுக்கு போதைப் பொருள்தடுப்பு பிரிவு இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளது. ஜூலை 4-ஆம் தேதி முதல் இந்த பதவிகாலியாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த இடத்திற்கு அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த 6 மாதங்களுக்கு பதவியில் தொடருவார் என்று கூறப்பட்டுள்ளது.பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளில் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர். 2002-ஆம் ஆண்டு, குஜராத்தில் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை, 2008 ஜூலையில் அகமதாபாத்தில்நடந்த குண்டுவெடிப்பு போன்றவற்றின் போது, அன்றைய முதல்வர் மோடிக்கு, உதவிக்கரமாக திகழ்ந்தவர்தான் அஸ்தானா.மகாராஷ்டிரத்தில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின்போது, அதை ஒடுக்கியதிலும் அஸ்தானாவுக்கு பெரும்பங்குண்டு.
இதனாலேயே மோடி பிரதமரான போது, அஸ்தானா சிபிஐ சிறப்பு இயக்குநர் ஆக்கப்பட்டார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோஷி மீதான வழக்கொன்றில் ஹைதராபாத்தை சேர்ந்த சனா பாபு என்ற தொழிலதிபர் பெயர் அடிபட்டது. அப்போது, சனாபாபுவை வழக்கில் இருந்து விடுவிக்க ராகேஷ் அஸ்தானா மற்றும் அவருடன் வேலை பார்த்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் ஆகியோர் ரூ. 3 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்
எழுந்தது.அதேபோல, மிகப்பெரிய பணக்காரர்களாக விளங்கியவர்களும், ‘ஸ்டெர்லிங் பயோடெக்’என்ற மருந்துக் கம்பெனி முதலாளிகளுமான சந்தேசரா சகோதரர்கள் ரூ. 5 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு செய்துவிட்டு துபாய்க்கு தப்பினர்.இந்த முறைகேடுகளிலும் அஸ்தானாவுக்கு தொடர்பு இருப்பதாக, டைரிக் குறிப்புகள் மூலம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.இந்த ஊழல் புகார்களின் பேரிலேயே,அஸ்தனா மீது, கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தார். அப்போது ஊடே புகுந்து, அலோக் வர்மா, அஸ்தானா இருவர் மீதும் நடவடிக்கை- பணியிடமாற்றம் என்று ஆட்டையைக் கலைத்த மோடி அரசு, தற்போது அஸ்தானாவுக்கு அடுத்தடுத்து புதிய பதவிகளை வழங்கி கௌரவிக்க துவங்கியுள்ளது.