புதுதில்லி:
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் சிலரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
மோடிக்கு அடுத்த இடத்தில் தான் இருப்பதை நிரூபிக்கும் விதமாக, அதேநேரம் அதிகாரப்பூர்வமற்ற வகையில், இந்த கூட்டத்தை ராஜ்நாத் சிங் கூட்டியுள்ளார்.மத்திய அமைச்சரவையில், பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில்இருப்பதாக கூறப்படுபவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆனால், அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழுக்களில், ராஜ்நாத் சிங்கிற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. அமித்ஷாவுக்கு 8 அமைச்சரவைக் குழுக்களில் இடம் வழங் கிய மோடி, ராஜ்நாத் சிங்கிற்கு, 2 அமைச்சரவைக் குழுக்களில் மட்டுமே இடம் வழங்கினார். இதனால் ராஜ்நாத் சிங் அதிருப்தி அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் பாஜக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், பின்வாங்கிய மோடி,ராஜ்நாத் சிங்கிற்கு, மேலும் 4 அமைச்சரவைக் குழுக்களில் இடம் வழங்கி, சமாதானப்படுத்தினார்.இந்நிலையில்தான், மத்திய அமைச்சரவையில், மோடிக்கு அடுத்த இடத்தில் தான்தான் இருக்கிறேன் என்பதை வெளிக் காட்டும் விதமாக, மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை தில்லியில் வெள்ளியன்று ராஜ்நாத் சிங் நடத்தியுள்ளார். ராஜ்நாத் சிங்அழைப்பு விடுத்திருந்த இந்த அதிகாரப்பூர்வமற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டிருக்கிறார். எனினும் இதில் பேசப்பட்ட விஷயங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.