புதுதில்லி:
அரசியல் சுயநலத்துக்காக மனைவியை கைவிட்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அண்மையில் விமர்சித்திருந்தார்.
பிரதமர் மோடி, தனக்கு குடும்பம் இருப்பதையும், மனைவியை நிராதரவாக விட்டுவிட்டு வந்ததையும் நீண்டகாலமாக வெளியே சொல்லவில்லை. வேட்புமனுவில் கூட மனைவி இருக்கிறார் என்பதை, அண்மையில்தான் மோடி வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதனை மனத்தில் வைத்துத்தான், மோடி பெண்களுக்கு எந்தளவிற்கு மரியாதை தருபவர் என்று தனக்குத் தெரியும் என்றும், அரசியல் சுயநலத்திற்காக கட்டியை மனைவியையே கைவிட்டவர்தானே மோடி என்றும் மாயாவதி விமர்சித்திருந்தார்.இதற்கு, நேரடியாக மாயாவதியோடு மோதாத பாஜக, தலித் தலைவரான மாயாவதிக்கு எதிராக, மற்றொரு தலித் தலைவரான குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே-வை தூண்டிவிட்டுள்ளது.
அத்வாலேவும், தனக்கு பாஜக வழங்கிய அமைச்சர் பதவிக்கு விசுவாசம் காட்டும் வகையில், மாயாவதியை மோசமாக விமர்சித்துள்ளார். “ மாயாவதி திருமணம் செய்யாதவர். குடும்பம் என்றால் என்னவென்றே அவருக்கு தெரியாது. திருமணம் செய்திருந்தால் கணவரை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு தெரிந்திருக்கும்” என்று கொச்சையாக பேசியுள்ளார்.