மாதர்கள் பதுமைகளாக
மேதினியில் உலா வரும் நாளன்று
ரோஜா மலர் கொடுத்து
ராஜபாட்டையில் பவனி வரும் நாளன்று
கற்களும் முட்களும் நிறைந்த
காட்டாற்றுப் பாதையில்
எட்டு மணி வேலை உரிமை
வாக்குரிமை எனும்
இருகண் இணை உரிமைகளை
ஒரு மாதராய்
விஸ்வரூபம் எடுத்த போரில்
வெற்றி கண்ட சரிதம்
போற்றுதலே மனிதம்
நூறாண்டு கடந்தும்
வேரான உரிமை
கிட்டாத கொடுமை
கிட்டும் புதுமை
எட்டும் பொதுமையில்
பிறப்பு முதலாய்
இறப்பு ஈறாய்
வெறுப்பு விதைக்கும்
பாலினப் பாகுபாடு
வேரறுக்க நீ கூடு
கல்வி கானலாய்
எளியோர்க்குக் காத தூரமாய்
வேலை கனவாய்
பெருநிறுவனக் களவாய்
மாநிலப் பட்டியலின் கல்வி
களவாடிக் கடத்தப்பட்டது
பொதுப் பட்டியலுக்கு
இந்தியாவின் ஆன்மா
பிந்திய ஊர்களின்
முதுகெலும்பு வேளாண்மை
முதுகுடைந்து படுக்கையில்
மகளிரோ பாதிப்பில்
நடவும் அறுவடையும்
நடப்பதே அத்திப்பூத்தாற்போல்
நடப்பதோ எந்திரத்தில்
கிடைக்குமோ வேலை மந்திரத்தில்?
காதலும் வீரமும்
காலங் காலமாய்
களம் கண்டன
உளம் விரும்பி
சங்க காலந் தொட்டு
எங்கும் பரவி திக்கெட்டும்
கணினி யுகத்திலும்
கண்மூடித்தன சாதியம்
வேர்விட்டு மோதியும்
அரங்கேறும் ஆணவக் கொலைகள்
ஆற்றுக்கும் போற்றும் சாமிக்கும்
ஆயிரமாயிரம் பெயர்களிங்கே
பெண்கள் பாலியலுக்கு மட்டுமே
நிஜத்திலிங்கே
குழந்தைகள் முதலாய்
தாய்மார்கள் ஈறாய்
ஆணாதிக்கப் பொறியில்
சிக்கிச் சின்னாபின்னமாய்
பாலியல் வன்மம் திண்ணமாய்
ஆண்டுதோறும்
ஆடவர்களும் அனுசரிக்கும்
மகளிர் தினங்களை
மேதினி கொண்டாடுவது இருக்கட்டும்
பெண்களும்
ஆண்களுக்கு நிகரான
மனிதர்களாவது எப்போது?
புனிதர்களாவீர் நீவீர் அப்போது..