புதுதில்லி:
இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை, 2019ஆம் ஆண்டில் சுமார் 3.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.டபிள்யு.எஸ்.ஆர். (International Wines and Spirits Record -IWSR) சந்தை ஆய்வுப்படி, 2018-ஆம் ஆண்டில் 663 மில்லியன் கேஸ் (ஒரு கேஸ் என்பது 9 லிட்டர் அடங்கிய பெட்டி) மதுபானங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் 2019ஆம் ஆண்டில், மொத்தம் 686 மில்லியன்ஸ் கேஸ் மதுபானங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இது 3.4 சதவிகித வீழ்ச்சி என்று ஐ.டபிள்யு.எஸ்.ஆர். கூறுகிறது.
மதுபானங்கள் விற்பனையில் விஸ்கி விற்பனை 3.5 சதவிகிதம், பீர் விற்பனை 3.6 சதவிகிதம், பிராந்தி விற்பனை 2.5 சதவிகிதம், ரம் விற்பனை 2.9 சதவிகிதம், வோட்கா விற்பனை 6.7 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளன. 2016-இல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் காரணமாக, 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் மதுபான விற்பனை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. நெடுஞ்சாலைகளில் மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையும் இந்த வீழ்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது.எனினும், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவும் பொருளாதார மந்த நிலை, பல்வேறு பொருட்களின் நுகர்வுக்கான தேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமீப காலமாகவே இந்தியாவில் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்து வருகிறது என்று உலகின் மிகப் பெரிய பீர் நிறுவனங்களில் ஒன்றான “கார்ல்ஸ்பெர்க்” தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மதுபானங்கள் விற்பனை, 2018ஆம் ஆண்டில் 18 சதவிகித வளர்ச்சியை, இந்தியாவில் கண்டிருந்தன. ஆனால், 2019-இல் அது வெறும் 1 சதவிகித வளர்ச்சியாக சரிந்துள்ளது.உலகின் இரண்டாவது மிகப் பெரிய மதுபான நிறுவனமான “பெர்னார்டு ரிச்சர்டு” நிறுவனமும் மதுபான விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை எப்போதுமே அதிகமாகவே இருக்கும். டாஸ்மாக் ரகங்கள் மட்டுமல்லாமல் உயர் ரக மதுபானங்களுக்கான தேவையும் இந்தியாவில் எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆனால், 2019-இல் அது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. 2 சதவிகித அளவிற்கே இறக்குமதி ஆகியுள்ளன.பொருளாதார மந்தநிலை முக்கியக் காரணம் என்றாலும், ஆந்திரப் பிரதேசத்தில் மதுபானங்கள் மீதான தடையும், இந்தியாவின் ஒட்டுமொத்த மதுபான விற்பனை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.