புதுதில்லி:
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ‘எல்ஐசி’-யின் மொத்த சொத்து மதிப்பு 31 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் பிரிமிய வருவாய் மட்டும் 5.7 சதவிகிதம் அதிகரித்து, 3 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையில், நாட்டின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. புளுசிப் எனப்படும் நட்சத்திர பங்குகளிலேயே பெரும்பாலும் அதிக முதலீட்டை செய்து வரும் எல்.ஐ.சி, தனது 94 சதவிகித வருவாயை முகவர்கள் வாயிலாகவே ஈட்டுகிறது. மீதமுள்ள தொகை மட்டுமே ஆன்லைன் மற்றும் வங்கிகள் வாயிலாக எல்ஐசி பெறுகிறது.அந்த அடிப்படையில், கடந்த 2018 - 2019ஆம் ஆண்டில் எல்ஐசி நிறுவனத்தின் மொத்த பிரிமியம் வருவாய் 3 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 6 சதவிகிதம் அதிகமாகும். கடந்த 2017 - 2018இல், மொத்த பிரிமியம் வருவாய் 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் ஆயுள் மற்றும் குழு மேம்பாட்டிலிருந்து அதன் புதிய வணிக வருமானம் கடந்த 2018 -2019ல் மட்டும் 10.11 சதவிகிதம் அதிகரித்து 91 ஆயிரத்து 179 கோடியே 52 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2017 -2018இல் 82 ஆயிரத்து 807 கோடியே 83 லட்சம் ரூபாயாக இருந்தது.மொத்த வருமானத்தைப் பொறுத்தவரை, 7.10 சதவிகிதம் அதிகரித்து 5 லட்சத்து 60 ஆயிரத்து 784 கோடியே 39 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இது முன்னர் 5 லட்சத்து 23 ஆயிரத்து 611 கோடியே 11 லட்சமாக இருந்தது. அதேபோல, 2018-19இல் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடிகளுக்கு எல்ஐசி நிறுவனம் பாலிசிகளை விற்றுள்ளது. முந்தைய ஆண்டில் இது 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி என்ற அளவிலேயே இருந்தது.இவற்றின் மூலமாக, எல்ஐசி நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 9.38 சதவிகிதம் அதிகரித்து, 31 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 2017-18இல் 28 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.