tamilnadu

img

மதவெறியர்களின் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல் ஒன்றுபட்ட எழுச்சியை மேலும் வலுப்படுத்துவோம்.... சீத்தாராம் யெச்சூரி அழைப்பு

நாடாளுமன்றத்தில் பாஜக அரசாங்கம் குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியதை ஆட்சேபித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடுத்திருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடுத்துள்ள மனுவில்,  பாஜக அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது மட்டுமல்ல, அரசியல் சாசனத்தையே மறுப்பது ஆகும்.இரண்டாவதாக, இந்தச் சட்டத் திருத்தமானது  அசாம் ஒப்பந்தத்தையும் மீறுகிறது. இதன் பிரதான நோக்கம் என்னவெனில், நாட்டில் மதவெறி உணர்ச்சிகளை ஆழமாகவும் கூர்மையாகவும் கொண்டு செல்ல வேண்டும் என்பதேயாகும்.

குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியதற்கு எதிராக நாட்டில் எழுந்துள்ள கிளர்ச்சி நடவடிக்கைகளை, பிரதமர் உட்பட  இந்த அரசு,  இந்து – முஸ்லிம் பிரச்சனையாகக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. இது மிகவும் பொறுப்பற்ற தன்மையிலானதாகும். நம் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவே, இத்திருத்தத்தை எதிர்க்கிறோம். இந்திய அரசமைப்புச் சட்டம்தான் இந்தியாவில் நாட்டுப்பற்றைப் பிரதிபலித்திடும் உயர்ந்தபட்ச சட்டமாகும்.  பிரதமர், குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியதற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் அணிந்திருக்கும் உடையிலிருந்தே அவர்கள் யார் என்று தெரிகிறது என்பதுபோல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது நேரடியாக ‘மதவெறித்தன்மை கொண்டது’ என்பது தெளிவு. மேலும் கிளர்ச்சியாளர்கள் சில அண்டை நாடுகளின் தூண்டுதலின்பேரில் கிளர்ச்சி செய்வதாகக் கூறியிருக்கிறார்.

நான் மீண்டும் கூற விரும்புகிறேன். நாங்கள் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம், நாம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப்பிடிப்பதாக பலமுறை உறுதி மொழி எடுத்திருக்கிறோம். எனவே பிரதமர் போன்று உயர்பதவியிலிருக்கும் ஒருவரிடமிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவது, அவருடைய பதவிக்கு அழகல்ல என்று தெரிவித்துக் கொள்கிறோம்.மூன்றாவதாக, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைக்கு எதிராக கடுமையான முறையில் கிளர்ச்சி செய்துகொண்டிருக்கிறோம். அசாமில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாநிலத்தை  ராணுவம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இணையத் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா டுடே ஏட்டில், உலகிலேயே அதிக அளவிற்கு இணையத் தொடர்பைத் துண்டித்த நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. நாட்டின் ஏதாவது ஒரு முனையில் இணையத் தொடர்பு துண்டிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இந்த அளவிற்கு வேறெந்த நாட்டிலும் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டதில்லை.  இது எந்தவிதத்திலும் நாட்டின் பெருமையை உலகத்தின் முன் உயர்த்திடாது.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்திட இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டதை இந்த அரசு வெறும் இந்து – முஸ்லிம் பிரச்சனையாக கொண்டு செல்ல முயற்சிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்ட மீறல்களுக்கு எதிராகவே  நாடு முழுலதும் மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் அமைதியான முறையில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  மதவெறியர்களின் ஆத்திரமூட்டும் சூழ்ச்சி வலைகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.ஆர்எஸ்எஸ்-சின் அரசியல் அங்கமான பாஜக, தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குறிக்கோளான பாசிச இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தி இருக்கிறது. எனவே இதனை முழுமையாக எதிர்த்து முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.உடனடியாக வடகிழக்கு மாநிலங்களில் நிலைமையைச் சரி செய்திட வேண்டும். அடுத்து, நாட்டின் பல பகுதிகளில் மக்கள் தங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு நின்று, சாதிகளுக்கு அப்பாற்பட்டு நின்று, பாலின வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு நின்று இதனை எதிர்த்திட அணிதிரண்டு வருகிறார்கள்.ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்ததைப் பார்த்தோம். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  பல்கலைக் கழக வளாகத்திற்குள் பல்கலைக் கழக துணை வேந்தர் அல்லது உரிய அதிகாரியின் அனுமதியின்றி காவல்துறையினர் நுழைந்தது எவ்வாறு என்பதற்கு தில்லி காவல்துறையினருக்குப் பொறுப்பு வகித்திடும் உள்துறை அமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும். நம் நாட்டில் உள்ள சட்டங்களின்படி எந்தப் பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளும் பல்கலைக்கழக அதிகாரிகளின் உத்தரவின்றி காவல்துறையினர் நுழைந்திட முடியாது. அப்படி இருக்கும்போது ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்திற்குள் எப்படி காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தார்கள், மாணவர்களை தாக்கி காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்பதை நாடே பார்த்தது. 

நாட்டில் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருப்பதைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மக்களின் உண்மையான ஊதியத்தில் இழப்பு ஏற்பட்டிருப்பதைப் பற்றி கவலைப்படவில்லை. மக்களின் வாழ்வாதாரங்கள் அதலபாதாளத்திற்கு சென்றுகொண்டிருப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.  இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து அவர்கள் பெற்றிட்ட, மக்களை மதவெறி அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.நாட்டின் ஒற்றுமை மிகவும் முக்கியம். நாம் அனைவரும் ஒன்றுபட்டுநின்று, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடுவோம், நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திடுவோம்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

====தமிழில் : ச.வீரமணி===