புதுதில்லி:
தண்ணீர் சுத்திகரிப்பான்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்று ‘கென்ட் ஆர்ஓ சிஸ்டம்ஸ்’ (Kent RO Systems ) ஆகும். உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த இந்நிறுவனம் அண்மையில் சப்பாத்தி மாவு பிசைவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த விளம்பரத்தில், வீட்டு பணிப்பெண்ணின் கைகள் சப்பாத்தி மாவை பிசைவதை போன்ற படம் ஒன்று போடப்பட்டு, அப்படத்திற்கு மேலே “உங்கள் வேலைக்காரி கோதுமை மாவை கைகளால் பிசைய அனுமதிக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டு இருந்தது.மற்றொரு படத்தில், “அவள் கைகள் அசுத்தமாக இருக்கலாம்” என்று கூறிவிட்டு, அதன் கீழே, மாவைப் பிசைவதற்கு “கென்ட் சப்பாத்தி மற்றும் பிரெட் மேக்கரைத் தேர்வு செய்யுங்கள்” என கூறப்பட்டிருந்தது. மேலும் தங்களின் ஆட்டோமேஷன் இந்த நேரத்தில் (கொரோனா) சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதாவது, வீட்டுவேலை செய்வோரின் கைகள் சுத்தமாக இருக்காது என்பதாகவும், அவர்கள் பிசையும் சப்பாத்தி மாவால் சுகாதாரம் பாதிக்கப்படும் என்றும் கொச்சைப்படுத்தி இருந்தது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. “கொரோனா காலத்திலும்- தங்கள் சுய லாபத்திற்காகவும் பாரபட்சமான முறையிலும் வர்க்க ரீதியிலான மனோபாவத்தை மீட்டுருவாக்கம் செய்யும் இதுபோன்ற விளம்பரங்களை எதிர்ப்போம்” என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன.“கொரோனா தொற்று பல பேராசை கொண்ட நிறுவனங்களின்அசிங்கமான முகங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தமோசமான விளம்பரம், பெண்கள் கைகளின் தூய்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது” என்றும் காட்டமான பதிவுகள் வெளியாகின.
விளம்பரத்தின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்துப் போட்டு, “கெண்ட்-டை புறக்கணிப்போம்” (#BoycottKent) என்ற ஹேஷ்டேக்கையும் பலர் டிரெண்ட் ஆக்கினர்.இதையடுத்து, கென்ட் நிறுவனம் தற்போது மன்னிப்பு கோரி இருக்கிறது. “கென்ட் விளம்பரத்தை வெளியிட்டதற்கு எங்களை மன்னித்துக் கொள்ளவும். இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆகையால் இது திரும்பப் பெறப்பட்டது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் நாங்கள் மதிக்கிறோம்” என்று கென்ட் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குப்தா கூறியுள்ளார்.