tamilnadu

img

கறுப்புப் பணத்தை மாற்றவே தேர்தல் பத்திரங்கள் உதவும்..

புதுதில்லி:
தேர்தல் காலங்களில், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு, வங்கிகள் மூலம் எலக்டோரல் பாண்ட் (Electoral Bonds) எனும் தேர்தல் நிதிப் பத்திரங்களை கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த நிதிப்பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் ஒரு சில கிளைகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் அப்போது கூறப்பட்டது.இந்திய குடிமகனோ அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிறுவனமோ இந்த பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் அரசியல் கட்சிக்குநன்கொடை வழங்கலாம். இந்த பத்திரங்களை வாங்கியவர் பெயர் இருக்காது என்பதுடன், நிதி அளிப்பவரின் விவரமும் வங்கிகளால் ரகசியமாக வைத் திருக்கப்படும். இதனால் இந்த திட்டம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால், பாஜகஇதனை முழுவீச்சில் நடைமுறைப் படுத்தியது. அதற்கு பலனும் கிடைத்தது.  2018-19 நிதியாண்டில், நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து, சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு பாஜகவுக்கு நன்கொடை கிடைத்தது.இது நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. கறுப்புப் பணத்தை தங்கள் பக்கம் திருப்பி விடுவதற்காகவே தேர்தல் நிதிப்பத்திரங் களை அறிமுகப்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதனிடையே, “பாஜக கொண்டுவரும் தேர்தல் நிதிப் பத்திரங்களால், நாட்டில் கறுப்புப் பண நடவடிக்கை ஊக்குவிக்கப்படும்; அத்துடன் 2016ஆம் ஆண்டில் எந்த காரணத்திற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மோடி கொண்டுவந்தாரோ, அதற்கு தேர்தல் பத்திரங்கள் நேர் எதிரானவை” என்று அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்படேல் எச்சரிக்கை செய்திருப்பது, அண்மையில் தெரியவந்துள்ளது.தகவல் ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ், இதுதொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு கிடைத்த பதிலில்தான், தேர்தல் நிதிப்பத்திரங்கள் திட்டத்தை, 2017-ஆம் ஆண்டு அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் எதிர்த்தது அம்பலமாகியுள்ளது. அதாவது, அன்றைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு, உர்ஜித் படேல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ஒரு வங்கிக்கு கரன்சி நோட்டுக்கு இணையான பத்திரங்கள்வழங்க அனுமதிப்பது சர்ச்சைக்குரிய தாகும். ரிசர்வ் வங்கிக்கு மட்டுமேஇவ்வாறு நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் வெளியிடும் உரிமை உள்ளது. அந்த உரிமை தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பறிக்கப்படுகிறது. எனவே, ரிசர்வ் வங்கி அல்லாத மற்ற வங்கிகள் இவ்வாறு பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் பொருளாதார நிலை கடுமையாகப் பாதிக்கப்படும். முக்கியமாக இதைப் பயன்படுத்தி, பல ‘ஷெல்’ நிறுவனங்கள் தங்கள் கறுப்புப் பணத்தை மாற்ற முயலும். இதனால் பல பணமோசடிக் குற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. மேலும், கறுப்புப்பண புழக்கத்தைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் தேர்தல் நிதிப் பத்திர திட்டம் மூலம் தோல்வி அடையும்” என்று எச்சரித்துள்ளார்.ஆனால், உர்ஜித் படேலின் இந்த கடிதத்திற்கு, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பதில் எதையும் கூறாமல் சாமர்த்தியமாக கடந்து சென்றுள்ளார். இது தற்போது அம்பலமாகியுள்ளது.