கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடியால், இந்தியாவில் சுமார் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவர் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) எச்சரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், 270 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், உலக தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 81 சதவிகிதத்தினர் ஆவர். இந்தப் பாதிப்பு, இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சர்வதேச நெருக்கடி ஆகும்.
இதனால், இந்தியாவைப் பொருத்தமட்டில் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள். இதில் பெரும்பாலானோர் மீண்டும் கிராமங்களுக்கே திரும்பும் நிலை உண்டாகும்.
அதிகம் பாதிப்படையும் துறைகளாக கலை, பொழுதுபோக்கு, உணவு, போக்குவரத்து, ரியல் எஸ்டேட், உற்பத்தி, மொத்த சரக்கு வணிகம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. வேளாண் துறையைப் பொருத்தவரையில் அதன் பாதிப்புகள் இன்னும் உணரப்படவில்லை. கிராமப்புறங்களில் கொரோனா தொற்று ஒருவேளை பரவினால் ஒவ்வொரு நாட்டின் உணவுப்பாதுகாப்பும் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகும்.
ஏற்கெனவே, பொருளாதார நிலையற்றதன்மை, உள்நாட்டுப் பிரச்னைகள், அடிக்கடி ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றைச் சந்தித்து வரும் நாடுகள் கூடுதலாகப் பாதிப்படையக் கூடும். அதிகப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள துறைகளுக்கும் அதில் பணியாற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசுகள் கூடுதல் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
உலகத் தொழிலாளர் அமைப்பின் இந்த அறிக்கை நேரப்போகும் கடும் விளைவுகளைப் பற்றி நம்மை எச்சரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இதனைக் கவனத்திற்கொண்டு, நிலைமை மோசமடையும் முன்பே உரிய நிவாரணத்தை அறிவியுங்கள். அறிவித்ததை போர்க்கால அடிப்படையில் மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்.