tamilnadu

img

ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத் தடை

புதுதில்லி, செப். 2- முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு    உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 21 ஆம் தேதி கைது செய்த சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கு விசாரணையின் போது சிதம்பரம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கபில் சிபல்,  சிதம்பரத்திற்கு 74 வயது ஆவதால் தயவு செய்து  அவரை,  திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம். வீட்டுக் காவலில் வைத்து கூட விசாரித்து கொள்ளுங்கள், நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட வேண்டாம். 3 நாட்களில் உலகம் தலைகீழாகத் திரும்பி விடப்போவதில்லை என வாதிட்டார். 

வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து, ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.  வழக்கு விசாரணையின் போது,  சிதம்பரத்தை  வீட்டுக் காவலில் வைத்து விசாரிக்குமாறு அனுமதி அளிக்க  வேண்டும் என  கபில் சிபல் வாதாடியது குறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தை அணுகிடுமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 5ஆம் தேதி வரை அதாவது மேலும் 3 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டது.