புதுதில்லி:
தில்லி வன்முறையில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மிகட்சி பிரமுகரான கவுன்சிலர் தாஹிர் உசேனின் ஆலையில் தடயவியல் நிபுணர்கள் வெள்ளியன்று சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி,வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அச்சத்துடன் இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு தில்லி சந்த்பாக் பகுதியில் உளவுத்துறை அதிகாரிஅங்கித் சர்மா என்பவர் அவரது வீட்டின் அருகே இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர்கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து தில்லி காவல்துறையினர் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு எதிராக கொலை மற்றும் கலவர வழக்கு பதிவு செய்துள்ளனர். தாஹிர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை தாஹிர் உசேன் மறுத்துள்ளார்.
இந்நிலையில் சாந்த் பாக்பகுதியில் உள்ள தாஹிர் உசேனின் வீடு மற்றும் அவரது ஆலையில் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வெள்ளியன்று சோதனை நடத்தினர்.அப்போது முக்கிய தடயங்களை சேகரித்தனர். ஆலைக்கு சீல் வைத்துள்ளனர்.