புதுதில்லி:
மோடி ஆட்சியில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் நுகர்வோர் செலவினம் குறைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் பணமதிப்பு நீக்கம், தெளிவில்லாத ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால், இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஜிடிபி 5.6 சதவிகிதமாக குறைந்து விட்டது. ஏற்றுமதி குறைந்ததால், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
சிறு-குறு தொழில்கள் முடங்கிக் கிடப்பதால், கடந்த 5 ஆண்டுகளில் வேலையின்மை 8 சதவிகிதமாக அதிகரித்து விட்டது. நாட்டில் பணப்புழக்கமும் வெகுவாக குறைந்து விட்டது.இந்நிலையில், இந்தியாவில் நுகர்வோர் செலவினமும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2017-18-ம் ஆண்டில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக, பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard) ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியக் குடும்பங்கள் செய்யும் செலவுகள் குறித்த கள ஆய்வு அறிக்கையை மத்திய புள்ளியியல் அலுவலகம் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகாத நிலையில், அது தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மட்டும் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ வெளியிட்டுள்ளது.அதில், இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2011-12ஆம் ஆண்டில் நுகர்வோர் ஒருவரின் மாதாந்திர செலவினம் ரூ. 1,501 ஆக இருந்த நிலையில், அது 2017-18ஆம் ஆண்டில் ரூ.1,446 ஆகக் குறைந்துள்ளதாகவும்; இது, 3.7 சதவிகிதம் வீழ்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கிராமப்புறங்களில், நுகர்வோர் செலவினமானது 8.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
“2011-12ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் தனிநபர் உணவிற்காக செலவிடும் தொகை ரூ. 643 ஆக இருந்தது, தற்போது 2017-18ஆம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு ரூ. 580 ஆக குறைந்துள்ளது”கடைசியாக, 1972-73ஆம் ஆண்டில்தான் நுகர்வோர் செலவினம் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. அதன்பின்னர் தற்போது மோடி ஆட்சியில்தான் நுகர்வோர் செலவினம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கிராமப்புற நுகர்வு அதிவேகமாக சரிந்திருப்பதாக ‘நீல்சன்’ நிறுவனமும் அண்மையில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.