புதுதில்லி:
பிரிட்டனில் உள்ள பெருங் கோடீஸ்வரர்கள் பட்டியலை ‘சண்டே டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டு வருகிறது. நிலம், சொத்து, கலைப் பொருட்கள், நிறுவனங் களில் உள்ள பங்குகள் ஆகிய வற்றை அடிப்படையாக வைத்து,பிரிட்டனின் முதல் 1000 பணக் காரர்களை, ‘சண்டே டைம்ஸ்’ பட்டியலிட்டுள்ளது.
இதில், இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீசந்த் இந்துஜா மற்றும் கோபி சந்த் இந்துஜா ஆகிய இந்துஜா சகோதரர்கள் முதலிடத்தை பெற்றுள்ளனர். பிரிட்டனில் இந்துஜா குழுமத்தை நடத்தி வரும், இவர்களின் சொத்து மதிப்பு, 135 கோடி பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 270 கோடி) அதிகரித்து, 2 ஆயிரத்து 200 கோடி பவுண்ட் (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) ஆகியுள்ளது.
இதனையடுத்து இவர் களிருவரும் பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கெனவே 2014 மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.1914-ஆம் ஆண்டு மும்பையில் நிறுவப்பட்ட இந்துஜா குழுமம் தற்போது உலகளவில் பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. எண்ணெய், எரிபொருள், வங்கி,தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் பெரும் முதலீட்டுடன் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தை நான்கு சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். இதில் ஸ்ரீசந்த் இந்துஜா மற்றும் கோபி சந்த் இந்துஜா ஆகிய இருவரும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள்.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவரும் இந்தியாவை சேர்ந்தவரே ஆவார். மும்பையில் பிறந்த டேவிட் ரூபன் (80), மற்றும் சைமன் ரூபன் (77) ஆகிய இருவரும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். இந்துஜா சகோதரர்களைப் போல இவர்களும் சகோதரர்கள்தான். இவர்களது சொத்து மதிப்பு 1,870 கோடி பவுண்ட் (சுமார் ரூ. 1 லட்சத்து 70 கோடிகள் ) ஆகும்.