tamilnadu

img

வறுமை, துன்ப துயரத்தில் இந்திய மக்கள்.... பிஎம் கேர்ஸ் நிதியை இப்போதாவது செலவு செய்யுங்கள் பிரதமரே...

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்றைக்காரணம் கூறி, தன் பெயரில் தனியார் அறக்கட்டளை (பிஎம் கேர்ஸ்) ஒன்றின் மூலம் வசூல் செய்துவைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக் கான கோடி ரூபாயை, இப்போதா வது பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு செலவு செய்திட பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுபரவுவதில் இந்தியா, பிரேசிலைப் பின்தள்ளி, முதலிடத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ்தொற்றைப் பரவாது கட்டுப்படுத்து வதிலும் தன்னுடைய திறமை யின்மையை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. மக்களை இத்தொற்றிலிருந்து காப்பாற்ற எவ்விதமான நடவடிக்கை யும் எடுக்காமல், அவர்களாகவேதங்களைக் காப்பாற்றிக்கொள்ளட் டும் என்ற விதத்தில் பாஜக அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் பாழாகிவிட்டது. கோடானுகோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டார்கள். பொது முதலீட்டை அதிகப்படுத்துங்கள், நாட்டின் உள்கட்டமைப்புகளைக் கட்டி எழுப்புங்கள், அதன்மூலம் வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்குங்கள், பொருளாதாரத்தை மீட்க வழிகாணுங்கள் என்று நாம் கூறியஆலோசனைகள் அனைத்தையும் மோடி அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. இதனால் நாட்டில் கோடானு கோடி மக்கள் இன்றையதினம் வறுமை, துன்ப துயரங்களுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.கொரோனா வைரஸ் தொற்றைச் சொல்லி தன்னுடைய பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலமாக வசூலித்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களை, மக்களைக் காப்பாற்றுவதற்காக, விடுவித்திட குறைந்தபட்சம் இப்போதாவது பிரதமர் மோடி   முன்வர வேண்டும்.மக்களுக்கு பணம் மற்றும் இலவச உணவு அளித்து, அவர்கள் உயிர்வாழ்வதற்கு வகை செய்திட வேண்டும்.  இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.  

35சதவீத வளர்ச்சி தேவை
மேலும் அவர் டுவிட்டர் பதிவில் இந்தியப் பொருளாதாரத்தின் மிக மிக மோசமான நிலைமை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்திய பொருளாதாரம் 2017ஆம் ஆண்டு இருந்த நிலைமைகளுக்கு திரும்புவதற்கே இன்னும் 35சதவீதம் அளவிற்கு வளர்ச்சியை அடைய வேண்டிய தேவை இருக்கிறது; 2017ஆம் ஆண்டு நிலவியது கூட நல்லவளர்ச்சி என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளவுக்கு பரவாயில்லை என்ற நிலை இருந்தது. இப்போது நிலைமை துயரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளது. 2016ஆம் ஆண்டிலிருந்து இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதத்தை கணக்கிட்டால் 2017ல்தான் 9.67சதவீதம் என்ற நிலையில் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு 5.78 சதவீதம், 8.18 சதவீதம், 5.59 சதவீதம் என தொடர்ந்து வீழ்ச்சியடைந்து 2020 முதலாவது காலாண்டில் வெறும் 3.09 சதவீதம் என்ற மிக மோசமான நிலைமையை எட்டியது. கொரோனா காலத்தில் அதலபாதாளத்தில் வீழ்ந்து மைனஸ் 23.9 சதவீதம் என்ற நிலைமைக்கு மிக மிக மோசமாக சரிந்திருக்கிறது எனவும் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார். (ந.நி.)