tamilnadu

அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை.... மறைமுகமாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு.... சு. வெங்கடேசன் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில்

புதுதில்லி:
கூடங்குளம் அணு உலைகள் போன்ற மென்நீர் உலைகளிலிருந்து வெளிவரும் “அணுக்கழிவுகளை” (பயன்படுத்தப்பட்ட எரிபொருள்) மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது . 

ஆழ்நில அணுக்கழிவு மையம் (DGR) இப்போதைக்கு தேவை இல்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பதிலளித்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கூடங்குளத்தில் உள்ள அணு உலைகள், மென்நீர் உலைகள் (PWR/LWR) வகையை சார்ந்தவை. இந்தியாவின் பிற இடங்களில் உள்ளவை கணநீர் உலைகளாகும். கூடங்குளம் தொடர்பாக ரஷ்யாவுடன்செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இங்கே உற்பத்தியாகும் அனைத்துக் கழிவுகளும் ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்கப்படும் என்றுதான் முடிவு செய்யப்பட்டது. பிறகு இரண்டாவது ஒப்பந்தத்தில், கூடங்குளம் கழிவுகள் கூடங்குளத்திலேயே கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலம் முடிவுற்றபிறகு அவை  மறுசுழற்சி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக முக்கியமான கேள்விகளை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்  எழுப்பினார்.அதற்கு அளித்துள்ள பதிலில், அணுசக்தி துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கூடங்குளம் போன்ற அணு உலைகளிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபற்றி சு.வெங்கடேசன் எம்.பி., விடுத்துள்ள செய்தியில், “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை, முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சிமையத்திற்கு எடுத்துப்போகும் வரை அருகாமையில் உள்ள மையத்தில் (away from reactor) வைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது மூலம், நீண்டகாலத்திற்கு அணுக்கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவிற்கான “ஆழ்நில அணுக்கழிவு மையம்” (DGR) இப்போதைக்கு தேவை இல்லை என்று பதில் அளித்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றம் 2103 ஆம் ஆண்டுகளில் வழங்கிய தீர்ப்பில், அடுத்த   ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவில் டிஜிஆர் அமைக்கப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவும்  இந்த பதில் உள்ளது. 2014ஆம் ஆண்டும் வழங்கிய தீர்ப்பிலும் டிஜிஆர் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவுள்ளது பிரதமரின் இந்த பதில். கூடங்குளம் அணுஉலைகள் தொடர்பாக போராடும் மக்கள் எழுப்பிவந்த கேள்விகளில் எவ்வளவு உண்மை இருந்தது என்பதை அரசு கொடுத்துள்ள பதிலில் இருந்து புரிந்துகொள்ளமுடிகிறது எனவும் சு.வெங்கடேசன் எம்.பி., கூறினார்.