tamilnadu

img

இந்தியாவின் ஜிடிபி 6.5% ஆகவே இருக்கும்

புதுதில்லி:
2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) 2019-ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்தது. நிதியாண்டின் முதல் காலாண்டே, இவ்வாறு அதிர்ச்சி அளித்த பின்னணியில் தான் ஆசிய வளர்ச்சி வங்கி, தனது கணிப்பை குறைத்துள்ளது. இந்த காரணத்தை அறிக்கையிலும் ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிட்டுள்ளது. இதற்குமுன், ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சிவங்கி கூறியிருந்தது. இந்நிலையில், பல துறைகளில் உற்பத்தி குறைந்து மந்தநிலை ஏற்பட்டதே வளர்ச்சி குறைவுக்கு வித்திட்டுள்ளது என புதிய அறிக்கை கூறியுள்ளது. அதேநேரம் 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.